தமிழ்நாடு

கோயம்பேட்டில் மாநகர பஸ்சின் மேற்கூரையில் ஆட்டம் போட்டு கல்லூரி மாணவர்கள் அட்டகாசம்

Published On 2022-10-18 08:39 GMT   |   Update On 2022-10-18 08:39 GMT
  • மாநகர பஸ்சின் ஜன்னல், படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம் செய்கிறார்கள்.
  • மாணவர்கள் அட்டகாசம் செய்த பஸ்சின் பின்னால் வந்த மற்றொரு பஸ்சில் பயணம் செய்த பயணி ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார்.

சென்னை:

சென்னையில் மாநகர பஸ், மின்சார ரெயில் நிலையங்களில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்து வருகிறார்கள். இதுகுறித்து போலீசாரும், பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் எச்சரித்தும் இது தொடர்கதையாக நீடித்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கிச்சென்ற மின்சார ரெயிலில் தொங்கியபடி நடைமேடையில் பட்டா கத்தியை உரசியபடி சென்ற மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் 'ரூட்டு தல' பிரச்சினையில் கல்லூரி மாணவர்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. மாநகர பஸ்களில் படிக்கட்டில் தொங்கியபடி சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்தாலும் மாணவர்களின் அட்டகாசம் அடங்கவில்லை. காலை மற்றும் மாலை நேரங்களில் படிக்கட்டு, ஜன்னலில் தொங்கியபடி பயணம் செய்து பயணிகள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது நீடிக்கிறது.

இந்த நிலையில் பிராட்வேயில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்ற மாநகர பஸ் (எண்15) கல்லூரி மாணவர்கள் சிலர் பஸ்சின் மேற்கூரையில் நின்றும், அமர்ந்தபடி நடனம் ஆடியும் அட்டகாசம் செய்யும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. மேலும் மாநகர பஸ்சின் ஜன்னல், படிக்கட்டில் தொங்கியபடியும் மாணவர்கள் ஆபத்தான பயணம் செய்கிறார்கள். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதனை மாணவர்கள் அட்டகாசம் செய்த பஸ்சின் பின்னால் வந்த மற்றொரு பஸ்சில் பயணம் செய்த பயணி ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார். கோயம்பேடு மேம்பாலத்தில் செல்லும்போது இந்த வீடியோ எடுக்கப்பட்டு உள்ளது. ஆபத்தை உணராமல் பஸ்சில் ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News