தமிழ்நாடு செய்திகள்

தேவாரம், திருவாசகம், திருப்புகழ் உள்ளிட்ட 108 அரிய பக்தி நூல்களை முதலமைச்சர் வெளியிட்டார்

Published On 2023-01-19 15:29 IST   |   Update On 2023-01-19 15:29:00 IST
  • ஆணையர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பதிப்பகப் பிரிவின் செயல்பாடுகளை பார்வையிட்ட முதலமைச்சர் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புத்தக விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார்.
  • 48 முதுநிலை கோவில்களின் ஆன்மிக புத்தக விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை:

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் பதிப்பகப்பிரிவு புதிதாக தொடங்கப்பட்டது.

இப்பதிப்பகப் பிரிவின் மூலம் முதற்கட்டமாக, தமிழ் மொழி வல்லுநர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டு, மறுபதிப்பு செய்து புதுப்பொலிவுடன் நூலாக்கம் செய்யப்பட்டுள்ள இந்து சமயம் சார்ந்த தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருப்பாவை, திருவெம்பாவை, அபிராமி அந்தாதி, நாலாயிர திவ்யபிரபந்தம், தமிழகக் கலைகள், சைவமும் தமிழும், இந்தியக் கட்டிடக்கலை வரலாறு, அவ்வையார் வரலாறு, பதினெண் புராணங்கள் உள்ளிட்ட 108 அரிய நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள கோவில்களில் பணியாற்றி பணிக்காலத்தில் இயற்கை எய்திய 10 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர், காவலர், கடைநிலை ஊழியர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மேலும், கோவில்களில் கண்டறியப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுருணை ஓலைகள், செப்புப் பட்டயங்கள் மற்றும் பிற ஓலைச்சுவடிகளையும், அவற்றை பராமரித்துப் பாதுகாக்கும் பணிகளையும், ஆணையர் அலுவலக வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் கடந்த 25.04.2022 அன்று 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கி வைக்கப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டிட கட்டுமானப் பணிகளின் தற்போதைய முன்னேற்றத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

பின்னர், ஆணையர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பதிப்பகப் பிரிவின் செயல்பாடுகளை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புத்தக விற்பனை நிலையத்தையும் திறந்து வைத்தார்.

இந்து சமய அறநிலையத் துறையின் பதிப்பகப் பிரிவின் மூலம் கோவில்களின் தலவரலாறு, தல புராணங்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட பக்தி இலக்கியங்கள், பழமையான அரிய நூல்களை புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்து அச்சிட்டு வெளியிடுவதுடன், 9 கோவில்களில் கண்டறியப்பட்டுள்ள சுமார் 61,600 சுருணை ஓலைகளும், 10 செப்புப் பட்டயங்களும், 20 பிற ஓலைச்சுவடிகளை பராமரித்துப் பாதுகாத்து, எண்மியப்படுத்தி நூலாக்கம் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு மறுபதிப்பு செய்து வெளியிடப்படும் அரிய புத்தகங்கள் ஆணையர் அலுவலக புத்தக விற்பனை நிலையம் மற்றும் 48 முதுநிலை கோவில்களின் ஆன்மிக புத்தக விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆழ்வார் திருநகரி, ஸ்ரீமத் பரபஹம்ஸ ரெங்கராமானுஜ ஜீயர் என்ற எம்பெருமானார் ஜீயர், குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் 46வது குரு மகாசன்னிதானம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், திருக்கயிலாய மரபு மெய்க்கண்டார் வழிவழி பேரூர் ஆதீனம் தவத்திரு சாத்தலிங்க மரு தாச்சால அடிகளார், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள், ஸ்ரீவில்லிப்புத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர், சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் என்.எழிலன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமர குருபரன், கூடுதல் ஆணையர்கள் கண்ணன், திருமகள், ஹரிப்ரியா, இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News