தமிழ்நாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆர்.நல்லகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருதுடன், ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கி சிறப்பித்தார்.

தகைசால் தமிழர் விருது- ரூ.10 லட்சம் பரிசுத்தொகையை அரசுக்கே திருப்பி கொடுத்த நல்லகண்ணு

Published On 2022-08-15 05:39 GMT   |   Update On 2022-08-15 05:39 GMT
  • சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆர்.நல்லகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கினார்.
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நல்லகண்ணுவின் பெருந்தன்மையை பாராட்டி நன்றி தெரிவித்தார்.

சென்னை:

இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்து இருந்தது.

இளம் வயதில் இருந்து பொது வாழ்க்கையில் ஈடுபட்டு இந்திய விடுதலை போராட்டத்தில் பங்கேற்று தனது 80 ஆண்டு கால பொது வாழ்வில் 7 ஆண்டு காலம் சிறை தண்டனை அனுபவித்து தன் வாழ்வையே ஏழை, எளியோருக்காகவும், விளிம்பு நிலை மக்களுக்காகவும் அர்ப்பணித்து தகைசால் என்ற சொல்லுக்கு இலக்கணமாக விளங்கி வருவதையொட்டி அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

சென்னையில் இன்று நடந்த சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆர்.நல்லகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருதுடன், ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கி சிறப்பித்தார். அதை பெற்றுக்கொண்ட ஆர்.நல்லகண்ணு உடனடியாக ரூ.10 லட்சம் காசோலை மற்றும் தனது சொந்த நிதி ரூ. 5 ஆயிரத்துடன் சேர்த்து மொத்தம் 10 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயை முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.

அதனை அவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். இதனை பெற்றுக்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நல்லகண்ணுவின் பெருந்தன்மையை பாராட்டி நன்றி தெரிவித்தார்.

Tags:    

Similar News