தமிழ்நாடு செய்திகள்

காலை உணவு திட்ட விரிவாக்கம்: திருக்குவளை பள்ளியில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2023-08-25 08:40 IST   |   Update On 2023-08-25 08:48:00 IST
  • பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணவு பரிமாறினார்.
  • காலை உணவு திட்ட விரிவாக்கத்தால் 31 ஆயிரம் அரசு பள்ளியில் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்.

நாகை:

நாகை மாவட்டம் திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை இன்று காலை தொடங்கி வைத்தார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படித்த பள்ளியில் இத்திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சர் உணவு பரிமாறினார். தனது அருகே அமர்ந்திருந்த மாணவர்களின் குடும்ப விவரங்களை கேட்டறிந்தார்.

பள்ளி மாணவர்களுடன் அமர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவை சாப்பிட்டு ருசி பார்த்தார். காலை உணவு திட்ட விரிவாக்கத்தால் 31 ஆயிரம் அரசு பள்ளியில் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்.

முன்னதாக, தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் நோக்கில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதி தொடங்கப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்திருந்தார். முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் செயல்பட்டு வரும் 1,545 தொடக்கப் பள்ளிகளில் ரூ.33.56 கோடியில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இதில் காலையில் உப்புமா, ரவா கிச்சடி, ரவா கேசரி, காய்கறி சாம்பார் உள்ளிட்ட பல்வேறு வகை உணவுகள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் 1.14 லட்சம் மாணவ-மாணவிகள் பயன் அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News