தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வு தள்ளிவைப்பு: முதலமைச்சர் அறிவிப்பு

Published On 2023-12-10 08:07 GMT   |   Update On 2023-12-10 08:23 GMT
  • அரையாண்டு தேர்வு நடத்துவது குறித்து இன்று ஆலோசனை நடத்தப்பட்டது.
  • இதில் தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்தார்.

சென்னை:

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிச்சாங் புயலால் கடும் வெள்ள சேதம் ஏற்பட்டது. இந்த மழை வெள்ளத்தால் மக்கள் பெரிய அளவில் சிரமப்பட்டனர். லட்சக்கணக்கானோர் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொருட்கள் அனைத்தையும் இழந்து தவிக்கின்றனர்.

இதற்கிடையே, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு நடத்துவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. அதிகாரிகளுடன் ஆன்லைனில் ஆய்வுக்கூட்டம் நடத்திய பிறகு முடிவு அறிவிக்கப்படும் என்றார்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாளை அரையாண்டு தேர்வுகள் தொடங்க இருந்த நிலையில் புத்தகங்கள் இல்லாமல் மாணவர்கள் தேர்வுக்கு படித்து தயாராக முடியாது என்பதை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் நாளை தொடங்க இருந்த தேர்வுகளை வரும் 13-ம் தேதி தொடங்க வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

புதிய கால அட்டவணையை வெளியிடவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மாணவர்களின் தேவையைக் கண்டறிந்து 12-ம் தேதி பாடப் புத்தகம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி வளாகங்களை சீரமைப்புக்காக ரூ. 1 கோடியே 90 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News