தமிழ்நாடு

தேஜஸ் ரெயிலில் பயணிகள் வருகை குறைவு- மாதம் ரூ.1 கோடி இழப்பு ஏற்படுவதாக தகவல்

Published On 2022-06-16 08:43 GMT   |   Update On 2022-06-16 08:43 GMT
  • தேஜஸ் ரெயில் ரெயில் திருச்சி, திண்டுக்கல் ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும்.
  • தேஜஸ் ரெயிலில் பல மாதங்களாக 20 சதவீதத்திற்கு மேற்பட்ட இடங்கள் நிரம்பாமல் காலியாக இயக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

மதுரை:

மக்கள் போக்குவரத்துக்கு பஸ் வசதியை விட ரெயில் பயணம் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக பயணிகள் மத்தியில் ரெயில் பயணம் மீது கூடுதல் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 1-ந்தேதி அதிவேகம் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய சொகுசு ரெயிலான தேஜஸ் ரெயில் சேவை தொடங்கப்பட்டது.

இந்த ரெயில் சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 12 மணிக்கு மதுரைக்கு செல்லும். மறுமார்க்கமாக மதுரையில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு சென்னை செல்லும்.

இந்த ரெயில் திருச்சி, திண்டுக்கல் ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும். 6.30 மணி நேரத்தில் இந்த ரெயில் இலக்கை சென்றடைவதால் பயணிகள் மத்தியில் வரவேற்பு அதிகமாக உள்ளது. இந்த ரெயில் தாம்பரத்தில் நின்று செல்ல வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருந்தபோதிலும் ரெயில்வே வாரியம் அதற்கு அனுமதி வழங்கவில்லை.

இந்த நிலையில் தேஜஸ் ரெயிலில் பல மாதங்களாக 20 சதவீதத்திற்கு மேற்பட்ட இடங்கள் நிரம்பாமல் காலியாக இயக்கப்பட்டது தெரியவந்துள்ளது. சென்னை சிட்லபாக்கத்தை சேர்ந்த தயானந்த கிருஷ்ணன் என்பவர் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தேஜஸ் ரெயிலில் 2019 முதல் 2022 ஆண்டு ஏப்ரல் வரை (கொரோனா ஊரடங்கு காலம் தவிர) மாதந்தோறும் எவ்வளவு இடங்கள் நிரம்பின என்பது உள்பட பல கேள்விகளை கேட்டிருந்தார்.

அதன்படி தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கிடைத்த விபரத்தில் கூறியிருப்பதாவது:-

தேஜஸ் ரெயிலின் எக்ஸிக்யூட்டி சேர்காரில் 56 இடங்களும், ஏ.சி. சேர்காரில் 856 இடங்களும் உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் எக்ஸிக்யூட்டி சேர்காரில் 22.69 சதவீத இடங்களும், ஏ.சி. சேர்காரில் 41.86 சதவீத இடங்களும் காலியாக இயக்கப்பட்டது.

2019ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் எக்ஸிக்யூட்டி சேர்காரில் 29.04 சதவீத இடங்களும், 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 42.26 சதவீத இடங்களும், 2021ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 50.06 சதவீத இடங்களும், 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 20.76 இடங்களும், ஏப்ரல் மாதத்தில் 5.63 சதவீத இடங்களும் நிரம்பாமல் காலியாக இருந்துள்ளன.

அதேபோல் ஏ.சி. சேர்காரில் 2019ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 35.05 சதவீத இடங்களும், டிசம்பர் மாதத்தில் 21.71 சதவீத இடங்களும், 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 45.87 சதவீத இடங்களும், ஜனவரி மாதத்தில் 39.69 சதவீத இடங்களும், 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 20.07 சதவீத இடங்களும் நிரம்பாமல் காலியாக இருந்தது.

மறுமார்க்கமாக மதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட தேஜஸ் ரெயிலில் பல மாதங்களாக இடங்கள் நிரம்பாமல் இருந்துள்ளது. இதன் மூலம் ரெயில்வேக்கு மாதம் ரூ.1 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே வருவாய் இழப்பை தவிர்ப்பதோடு தாம்பரம் பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் தேஜஸ் ரெயிலை நிறுத்த ரெயில்வே வாரியத்துக்கு 2019-2020 காலக்கட்டங்களில் 6 முறை பரிந்துரை கடிதங்களை அதிகாரிகள் அனுப்பினர். அதற்கு ரெயில்வே வாரியத்திடம் இருந்து ஒப்புதல் கிடைக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே தகவல் உரிமை சட்டத்தின் மூலம் விவரம் பெற்ற பொறியாளர் தயானந்தகிருஷ்ணன் கூறும்போது, தாம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தென்மாவட்ட மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். இந்த மக்களின் சொந்த ஊர் பயணத்திற்கு தேஜஸ் ரெயிலை தாம்பரத்தில் நின்று செல்ல ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, தாம்பரத்தில் தேஜஸ் ரெயில் நிறுத்துவது தொடர்பாக ரெயில்வே வாரியத்திற்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை நிறைவேற்றுவது தொடர்பாக ரெயில்வே வாரியம் முடிவு எடுக்கும் என்றார்.

Tags:    

Similar News