தமிழ்நாடு

மாநகர போக்குவரத்து பயணிகளுக்கு ஒரு நற்செய்தி: சென்னையில் 6 மேம்படுத்தப்பட்ட பேருந்து முனையங்கள்

Published On 2023-08-26 07:12 GMT   |   Update On 2023-08-26 07:12 GMT
  • பல போக்குவரத்து முனையங்களின் தரம் மிகவும் விமர்சனத்துக்குரியது
  • பயணிகளுக்கு அனைத்துவிதமான அத்தியாவசிய அடிப்படை வசதிகளும் இங்கு உருவாக்கப்படும்

சென்னை மாநகர போக்குவரத்து கழகமும் (MTC), சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமும் (CMDA) சென்னைவாசிகளுக்கு, குறிப்பாக மாநகர பேருந்து போக்குவரத்தை சார்ந்திருக்கும் மக்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியை அளித்திருக்கின்றன.

சென்னையிலுள்ள பல போக்குவரத்து முனையங்களின் தரம் மிகவும் விமர்சனத்துக்குரியது.

பாளம் பாளமாக உடைந்திருக்கும் தரை மற்றும் மேற்கூரைகள், பெயர்ந்து வரும் டைல்ஸ்கள், குறைவான வெளிச்சம், மோசமான கழிப்பிட வசதி, கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத மற்றும் இருந்தாலும் செயல்படாத நிலை, பயணிகள் அல்லாத சிலர் சகஜமாக உலா வருவது, பெண்களுக்கு போதிய பாதுகாப்பின்மை உட்பட பல கட்டமைப்பு குறைபாடுகளை நீண்டகாலமாக சகித்து கொண்டுதான் மக்கள் போக்குவரத்து வசதியை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த குறைகளை களையும் விதமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள 6 பேருந்து முனையங்களை சகலவித வசதிகளுடன் தரமாக மேம்படுத்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர இருக்கிறது போக்குவரத்து கழகம்.

திரு.வி.க. நகர், தண்டையார்பேட்டை, கண்ணதாசன் நகர், முல்லை நகர், பெரியார் நகர் மற்றும் அம்பத்தூர் எஸ்டேட் ஆகிய 6 இடங்களில் செயல்படுத்தப்பட உள்ள இந்த மேம்பாட்டு திட்டம் பிற முனையங்களிலும் எதிர்காலத்தில் கொண்டு வரப்படலாம்.

தரமான மேற்கூரைகள், சூரிய ஒளி தகடுகள், மிகவும் தூய்மையான கழிப்பிட வசதி, அமர்ந்திருக்கும் வசதியுடன் காத்திருக்கும் அறைகள், சுத்தமான குடிநீர் வசதி, 24 மணி நேர கண்காணிப்பு கேமரா வசதி, அத்தியாவசிய பொருட்களை வாங்க கடைகள் உட்பட பல்வேறு வசதிகள் இந்த மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அறிவித்துள்ளது.

திரு.வி.க.நகர் மற்றும் அம்பத்தூர் முனையங்களுக்கான ஒப்பந்த புள்ளிகள் ஏற்கெனவே கோரப்பட்டுள்ளது. இதற்காக வளர்ச்சி குழுமத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள கட்டிடக்கலை வடிவமைப்பாளர்கள் தங்கள் வரைபட பணிகளை செய்து முடித்துள்ளனர்.

முதல் கட்டமாக இந்த இரு முனையங்களும் 2024-ல் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

வட சென்னையின் வளர்ச்சிக்கான பல திட்டங்களில் ஒன்றாக இந்த பேருந்து முனையங்களை சீர்படுத்துதலும் அடங்கும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News