தமிழ்நாடு

டெல்டா பகுதிகளில் மழையால் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று வருகை

Published On 2023-02-08 01:09 GMT   |   Update On 2023-02-08 01:09 GMT
  • காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையால் சேதமடைந்தன.
  • பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவை அனுப்பிவைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

சென்னை:

தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கியதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தணித்திடும் வகையில் நெல் கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் கடிதம் எழுதியிருந்தார்.

இந்தக் கடிதத்தை மத்திய அரசு உடனடியாக பரிசீலித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், மழையால் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதை நேரில் பார்வையிட மத்தியக் குழுவை அனுப்பிவைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்தியக்குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் தமிழகத்துக்கு வருகை தந்து நேரில் பார்வையிட உள்ளதாக தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பயிர் பாதிப்பு குறித்து மத்திய குழு இன்று ஆய்வு செய்கிறது. யூனுஸ், பிரபாகரன், போயா ஆகிய தொழிநுட்ப வல்லுநர்கள் அடங்கிய மத்திய குழு இன்று பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளையும், பயிர் பாதிப்பு குறித்தும் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

இந்த ஆய்வின் முடிவில், அவர்கள் மத்திய அரசுக்கு அளிக்கும் விவரங்களின் அடிப்படையில் மத்திய அரசு ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வது குறித்து தமிழக அரசுக்கு உத்தரவு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News