தமிழ்நாடு

அரசு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை உபகரணங்களை தண்ணீரில் சுத்தம் செய்த சிறுவன்

Published On 2023-12-13 04:43 GMT   |   Update On 2023-12-13 04:43 GMT
  • தூத்துக்குடியை சேர்ந்த சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பெற்றுள்ளார்.
  • சிறுவனின் தந்தை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 6-ந் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாவட்டம் முழுவதும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் வந்து சிகிச்சை பெறுகின்றனர். இங்கு தூத்துக்குடியை சேர்ந்த சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பெற்றுள்ளார்.

அவர் ஆஸ்பத்திரியின் 5-வது தளத்தில் ஆண்களுக்கான அறுவை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, ஒருவாரமாக சிகிச்சை பெற்றுள்ளார். அவருக்கு உதவியாக அவருடைய 10 வயது மகன் ஆஸ்பத்திரியில் இருந்தார்.

அந்த சிறுவன், கத்திரி, கத்தி, இடுக்கி போன்ற மருத்துவ உபகரணங்களை தண்ணீரில் சுத்தம் செய்யும் வீடியோ காட்சி நேற்று சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதனால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக டீன் சிவக்குமார், சம்பந்தப்பட்ட வார்டில் தீவிர விசாரணை நடத்தினார். தொடர்ந்து பணியில் இருந்த நர்சுகளை கண்டித்து, அறிவுரைகளை வழங்கினார்.

இதுகுறித்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் சிவக்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

சிறுவனின் தந்தை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 6-ந் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது வலது காலின் 2-வது விரலில் காயம் ஏற்பட்டு, அந்த விரல் அழுகியது. இதையடுத்து அந்த விரல் அகற்றப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டதன் காரணமாக நன்றாக குணமடைந்து வீட்டுக்கு செல்லும் நிலைக்கு வந்துள்ளார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு விரல் அகற்றப்பட்ட இடத்தில் போடப்பட்டிருந்த கட்டை நர்சுகள் பிரித்து மருந்து போட்டு மீண்டும் கட்டு போட்டுள்ளனர். கட்டுப்போடுவதற்காக பயன்படுத்திய கத்திரி உள்ளிட்ட சில உபகரணங்களை படுக்கையின் அருகே வைத்துள்ளனர். இதனை தூய்மை பணியாளர்கள் சேகரித்து சுத்தம் செய்வது வழக்கம்.

ஆனால், அந்த உபகரணங்களை பார்த்த சிறுவனின் தந்தை, அந்த பொருட்களை கழுவி வைக்குமாறு தனது மகனிடம் கூறியுள்ளார். அதன்பேரில், சிறுவன் அவைகளை சுத்தம் செய்துள்ளார். டாக்டர், நர்சு யாரும் சிறுவனை சுத்தம் செய்ய சொல்லவில்லை. ஆனாலும் மருத்துவ உபகரணங்களை சிறுவன் சுத்தம் செய்தது தவறு தான். இதுதொடர்பாக அந்த வார்டில் பணியில் இருந்த அனைவருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்காலத்தில் இதுபோன்று ஒரு தவறு நடைபெறாமல் இருக்க கவனமாக இருக்குமாறு அனைத்து வார்டுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்துவதற்காக மருத்துவ கண்காணிப்பாளர் பத்மநாபன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்வார்கள். அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News