தமிழ்நாடு

இடப்பிரச்சினையால் பாதை அடைப்பு: இறந்த தந்தையின் உடலை வீட்டில் இருந்து வெளியே எடுத்து வர முடியாமல் தவித்த மகன்

Published On 2023-08-17 06:40 GMT   |   Update On 2023-08-17 06:40 GMT
  • வழிப்பாதை அடைக்கப்பட்டதால் கிறிஸ்துதாசின் உடலை வெளியில் கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டது.
  • உடலை எடுத்து செல்ல வழி ஏற்படுத்தவில்லை எனில் தந்தையின் உடலை வீட்டிற்குள் புதைக்கப்போவதாக எசேக்கியேல் கூறினார்.

தாம்பரம்:

பல்லாவரம், குளத்துமாநகர், வேம்புலியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் எசேக்கியேல். இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிப்பவருக்கும் இடையே பல ஆண்டுகளாக வழிப்பாதை தொடர்பாக பிரச்சினை உள்ளது.

இதைத்தொடர்ந்து கடந்த 4 ஆண்டுக்கு முன்பு எசேக்கியேல் வீட்டுக்கு செல்லும் வழி அடைக்கப்பட்டதாக தெரிகிறது. இதன் பின்னர் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு நடந்து செல்லும் வகையில் 1½ அடி அகலத்தில் மட்டும் சென்று வர வழி ஒதுக்கப்பட்டது. இந்த பாதை வழியாக எசேக்கியேல் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்று வந்தனர்.

இந்த நிலையில் எசேக்கியேலின் தந்தை கிறிஸ்துதாஸ் (73) என்பவர் உடல் நலக்குறைவால் வீட்டில் இறந்து போனார். அவரது உடலை புதைக்க உறவினர்கள் முடிவு செய்தனர்.

ஆனால் வழிப்பாதை அடைக்கப்பட்டதால் கிறிஸ்துதாசின் உடலை வெளியில் கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டது. இது பற்றி எசேக்கியேல் மற்றும் அவரது உறவினர்கள் பக்கத்து வீட்டில் வசிப்பவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே போலீசார் விரைந்து வந்து இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உடலை எடுத்து செல்லும் வகையில் ஒரு நாள் மட்டும் போதிய அளவில் வழிவிடுமாறு எதிர்தரப்பினரிடம் போலீசார் தெரிவித்தனர். இதனை அவர் ஏற்றுக்கொண்டார். பல்லாவரம் போலீசிலும் புகார் செய்யப்பட்டது.

அப்போது உடலை எடுத்து செல்ல வழி ஏற்படுத்தவில்லை எனில் தந்தையின் உடலை வீட்டிற்குள் புதைக்கப்போவதாக எசேக்கியேல் கூறினார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

இதைத்தொடர்ந்து போதிய வழி ஏற்படுத்தப்பட்டதால் பிரச்சினை முடிவுக்கு வந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News