தமிழ்நாடு செய்திகள்

குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு: திற்பரப்பு அருவியில் குளிக்க மீண்டும் தடை

Published On 2023-11-07 10:54 IST   |   Update On 2023-11-07 14:09:00 IST
  • நாகர்கோவிலில் நேற்று மாலையில் மழை வெளுத்து வாங்கியது.
  • கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கடந்த 2 மாத காலமாக பரவலாக தினமும் மழை பெய்து வருவதால் ரம்யமான சூழல் நிலவி வருகிறது. காலையில் வெயில் அடித்தாலும் தினமும் இரவு நேரத்தில் மழை நீடித்து வருவதால் இதமான குளிர் காற்றும் வீசி வருகிறது.

மாவட்டம் முழுவதும் 2 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்து இருந்த நிலையில் நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது.

நாகர்கோவிலில் நேற்று மாலையில் மழை வெளுத்து வாங்கியது. அதன் பிறகு இரவு விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது.

சிற்றாறு-2 அணைப்பகுதியில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக 122.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பூதப்பாண்டி, களியல், கன்னிமார், தக்கலை, ஆரல்வாய்மொழி, கோழிப்போர்விளை, குருந்தன்கோடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் விடிய விடிய மழை பெய்தது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை நீடித்து வருவதால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் பெருஞ்சாணி அணையில் இருந்து 650 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். சிற்றார் 1- நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அணையில் இருந்து 234 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தொடர் மழையின் காரணமாக கோதையாறு, வள்ளியாறு, பரளிஆறு, பழையாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் குளிக்க தடை நீடிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மழைக்கு மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.

புத்தனார் கால்வாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக விளைநிலங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. மணவாளக்குறிச்சி பகுதியில் நேற்று மாலை இடி-மின்னலுடன் மழை பெய்தது. அப்போது அங்கு நெல் அறுவடை செய்து கொண்டிருந்த சேலத்தை சேர்ந்த டிரைவர் சபரி ராஜா மின்னல் தாக்கி பலியானார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். திருவட்டார், கிள்ளியூர் தாலுகாக்களில் தலா 2 வீடுகள் மழைக்கு இடிந்து விழுந்தது.

பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 43.33 அடியாக உள்ளது. அணைக்கு 839 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72.30 அடியாக உள்ளது. அணைக்கு 630 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 650 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 15.97 அடியாக உள்ளது. அணைக்கு 261 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.

அணையில் இருந்து 234 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பேச்சிப்பாறை 88.6, பெருஞ்சாணி 7.2, சிற்றார் 1-93.4, சிற்றார் 2- 122.6, களியல் 54.4, கன்னிமார் 57.8, கொட்டாரம் 10.2, குழித்துறை 20, மயிலாடி 5.2, நாகர்கோவில் 32.4, புத்தன் அணை 5.6, சுருளோடு 35.2, தக்கலை 88, குளச்சல் 14, இரணியல் 42, பாலமோர் 24.4, மாம்பழத்து றையாறு 95.4, திற்பரப்பு 24.8, கோழிப்போர்விளை 78.2, அடையாமடை 20, குருந்தன்கோடு 48, முள்ளங்கினாவிளை 25.6, ஆணைக்கிடங்கு 94.2, முக்கடல் 32.

Tags:    

Similar News