தமிழ்நாடு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகளுக்கு கூடுதல் பழங்கள் வழங்க மரங்கள் அதிகம் நடப்படுகிறது

Published On 2023-10-30 07:36 GMT   |   Update On 2023-10-30 07:36 GMT
  • விலங்குகளுக்கு உணவாக கூடுதலாக பழங்கள் வழங்கப்பட உள்ளது.
  • தற்போது விலங்குகளுக்கு உணவளிக்க இங்குள்ள தோட்டங்களில் இருந்து 197.2 கிலோ பழங்கள், 400 கிலோ காய்கறிகள் கிடைக்கின்றன.

சென்னை:

சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள், பறவைகள் உள்ளன. தற்போதைய நிலவரப்படி அங்கு 172 இனங்களை சேர்ந்த 2,368 உயிரினங்கள் உள்ளன. இங்குள்ள பெரும்பாலான விலங்குகளுக்கு பழங்கள் உணவாக வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு உணவாக கூடுதலாக பழங்கள் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகள் கூறியதாவது:- வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகளுக்கு பழங்களை உணவளிப்பதற்காக தனியாக பழத்தோட்டம் உள்ளது. விலங்குகளுக்கு கூடுதல் பழங்களை உணவாக வழங்குவதற்காக பழத்தோட்டத்தில் அதிகமாக பழ மரங்கள் நடப்பட உள்ளன. கொய்யா, நாவல், பப்பாளி மற்றும் வாழை மரங்கள் அதிகம் நடப்பட உள்ளன. இந்த வாரம் மட்டும் 150 கொய்யா மரங்களை நட முடிவு செய்துள்ளோம். தற்போது விலங்குகளுக்கு உணவளிக்க இங்குள்ள தோட்டங்களில் இருந்து 197.2 கிலோ பழங்கள், 400 கிலோ காய்கறிகள் கிடைக்கின்றன. கோடை காலத்தில் விலங்குகளின் உணவில் ஒரு பகுதியாக தர்பூசணி மற்றும் வெள்ளரி ஆகியவை சேர்க்கப்படுகிறது.

தற்போது பழத்தோட்டம் விரிவு படுத்தப்படுவதால் விலங்குகளுக்கு தேவையான பழம், காய்கறிகள் உள்ளிட்ட உணவுகளை இங்கேயே உற்பத்தி செய்ய முடியும்.

மேலும் உயிரியல் பூங்காவில் உள்ள நீர்ப்பறவைகள் மற்றும் முதலைகளுக்கு உணவளிக்க 602 ஹெக்டேர் பரப்பளவில் மீன்கள் வளர்க்கப்படுகின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News