தமிழ்நாடு செய்திகள்

பெரியார் பல்கலைக்கழகத்தை வணிகக்கூடமாக மாற்றக்கூடாது: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

Published On 2023-09-02 14:15 IST   |   Update On 2023-09-02 14:15:00 IST
  • வீண்செலவுகளை கட்டுப்படுத்தினாலே, கட்டிடங்களை வாடகைக்கு விடுவதன் மூலம் கிடைப்பதை விட அதிக தொகையை சேமிக்க முடியும்.
  • உண்மையை புரிந்து கொண்டு கட்டிடங்களை வாடகைக்கு விடும் முடிவை பெரியார் பல்கலைக்கழகம் கைவிட வேண்டும்.

சென்னை:

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சேலம் பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கலையரங்கம், உணவுக்கூடம், கூட்ட அரங்குகள், கணினி ஆய்வகம், வகுப்பறைகள் ஆகியவை வாடகைக்கு விடப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. அவற்றுக்கு ஒரு நாளைக்கு வாடகையாக ரூ.1200 முதல் ரூ.40,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு பல்கலைக்கழகம் அதன் கலையரங்கம் தொடங்கி வகுப்பறை வரை அனைத்தையும் வாடகைக்கு விடுவதாக அறிவிப்பது இதுவே முதல்முறையாகும். உயர்கல்வி வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம் கல்வி நலன்களுக்கு எதிராக இத்தகைய வணிகச் செயல்பாடுகளில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

பெரியார் பல்கலைக்கழகத்தில் அனைத்து கட்டிடங்களிலும் நன்றாக இயங்கிக் கொண்டிருக்கும் கைரேகை வருகைப் பதிவேட்டுக் கருவி அகற்றப்பட்டு, அதற்கு மாற்றாக முகப்பதிவு கருவிகள் பொருத்தப்படுகின்றன. இது முற்றிலும் தேவையற்ற ஒன்றாகும். இத்தகைய வீண்செலவுகளை கட்டுப்படுத்தினாலே, கட்டிடங்களை வாடகைக்கு விடுவதன் மூலம் கிடைப்பதை விட அதிக தொகையை சேமிக்க முடியும்.

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களின் கல்வி வளர்ச்சிக்காகத் தான் பெரியார் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது; நிகழ்ச்சிகளுக்கு கட்டிடங்களை வாடகைக்கு விடுவதற்காக அல்ல. இந்த உண்மையை புரிந்து கொண்டு கட்டிடங்களை வாடகைக்கு விடும் முடிவை பெரியார் பல்கலைக்கழகம் கைவிட வேண்டும்; கல்வி வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News