தமிழ்நாடு செய்திகள்

ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்திற்கு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டி பேசியபோது எடுத்த படம் - அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை பார்வையிட்ட மத்திய மந்திரி

ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம்- மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்

Published On 2023-08-05 10:55 IST   |   Update On 2023-08-05 14:22:00 IST
  • அகழாய்வு பணியில் ஏராளமான முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், வெண்கல பொருட்கள், தங்க நெற்றிப்பட்டயம் உள்பட பல்வேறு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
  • அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த அங்கேயே அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

செய்துங்கநல்லூர்:

உலக நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கடந்த 1876-ல் இந்தியாவிலேயே முதல் முதலில் அகழாய்வு நடந்தது. இங்கு தற்போது வரை பல்வேறு கட்டங்களாக மத்திய, மாநில அரசுகளின் சார்பில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது.

இதில் பண்டைய தமிழர்களின் வாழ்விடம், இடுகாடு ஆகியவை குறித்து தகவல்கள் கிடைத்தது. அகழாய்வு பணியில் ஏராளமான முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், வெண்கல பொருட்கள், தங்க நெற்றிப்பட்டயம் உள்பட பல்வேறு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்விடங்களை தேடும் பணியும் திருக்கோளூர், அகரம் போன்ற பகுதியில் நடந்து வருகிறது. இதனால் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் நாகரிகம் உலகிற்கு தெரியவந்தது. இங்கு நடந்த அகழாய்வில் கண்டு பிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த அங்கேயே அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. ஆனால் அந்த பணி கடந்த 145 ஆண்டுகளாக தள்ளிப்போய் கொண்டிருந்தது. கடந்த 2020-ம் ஆண்டு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் ஆதிச்சநல்லூரில் அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதனால் 145 வருட கனவு நிறைவடைந்தது.

இதையடுத்து அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. திருச்சி தொல்லியல்துறை மண்டல இயக்குனர் டாக்டர் அருண்ராஜ் தலைமையில் தொல்லியல் ஆய்வாளர் யதீஸ்குமார் தலைமையில் பணி நடந்து வந்தது.

இந்நிலையில் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. கனிமொழி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் ஊர்வசி அமிர்தராஜ், மார்கண்டேயன், சண்முகையா, கடம்பூர் ராஜூ, மேயர் ஜெகன் பெரியசாமி, கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், ஆதிச்சநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி சங்கர் கணேஷ், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகள், மலேசியா சுலுத்தான் இதுரீசு கல்வியியல் பல்கலைக்கழகம் தமிழ்த்துறை மாணவர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க அடிக்கல் நாட்டினார்.

மேலும் ஆதிச்சநல்லூர் பரம்பில் பி சைட்டில் ஆன் சைட் எனப்படும் எடுத்த பொருட்களை அந்த குழியில் வைத்து காட்சிப்படுத்தி உள்ளனர். மேலும் அதை சுற்றி கண்ணாடி பேழைகள் அமைத்து மேல் இருந்து குழியின் உள்ளே உள்ள பொருட்களை பார்க்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு இந்தியாவில் முதன் முறையாக ஆதிச்சநல்லூரில் தான் அமைக்கப்பட்டுள்ளது. இதை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

Tags:    

Similar News