2 நாட்களுக்கு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதலாக 1,515 பஸ்கள் இயக்கம்
- தமிழகத்தில் தொடா் விடுமுறை நாட்களை முன்னிட்டு கூடுதல் சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
- மாதவரத்தில் இருந்து 20 பஸ்களும், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு ஊா்களுக்கு 350 பஸ்கள் இயக்கம்.
சென்னை:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் தொடா் விடுமுறை நாட்களான நாளை (சனிக்கிழமை), ஞாயிற்றுக்கிழமை (15-ந் தேதி) மற்றும் மீலாது நபி (16-ந் தேதி) ஆகிய தினங்களை முன்னிட்டு, கூடுதல் சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி, இன்று மற்றும் நாளை ஆகிய நாட்களில் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய ஊா்களுக்கு கூடுதலாக 955 பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதேபோல, சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய ஊா்களுக்கு கூடுதலாக 190 பஸ்களும், மாதவரத்தில் இருந்து 20 பஸ்களும், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு ஊா்களுக்கு 350 பஸ்கள் என மொத்தம் 1,515 கூடுதல் பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
மேலும், ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை பொதுமக்கள் தங்கள் சொந்த ஊா்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.