தமிழ்நாடு

மின் கம்பத்தில் ஏறி விடிய, விடிய ரகளையில் ஈடுபட்ட தொழிலாளி- மதுபோதையில் அட்டகாசம்

Published On 2023-08-29 11:07 GMT   |   Update On 2023-08-29 11:07 GMT

    வடவள்ளி:

    குடிபோதையில் தொழிலாளி ஒருவர் செய்த அட்டகாசத்தால் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கிராம மக்கள் நேற்று இரவு விடிய, விடிய தூங்காமல் தூக்கத்தை தொலைத்தனர்.

    இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    தொண்டாமுத்தூர் அருகே உள்ள தாளியூர் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (வயது 55). மரம் ஏறும் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    பூபதி குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். தினமும் குடித்து விட்டு வந்து ரகளையில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டு இருந்தார். நேற்று மாலையும் அவர் மதுகுடித்து விட்டு வந்தார். வழக்கத்தை விட அதிக போதையில் இருந்த அவர் அட்டகாசத்தின் உச்சிக்கே சென்றார்.

    முதலில் அந்த பகுதியில் உள்ள நடராஜன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்து வீட்டுக்கு சென்றார். வீட்டின் மேற்கூரையில் போடப்பட்டிருந்த ஓடுகளை பிய்த்து எறிந்து ரகளையில் ஈடுபட்டார். இதை பார்த்து அந்த பகுதி மக்கள் திரண்டனர். அவர்கள் பூபதியை கண்டித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதன்பிறகும் பூபதியின் அட்டகாசம் தொடர்ந்து கொண்டே இருந்தது. நள்ளிரவு 12 மணி அளவில் பூபதியின் தொல்லை அதிகரிக்கவே எரிச்சல் அடைந்த ஒருவர் அவசர போலீஸ் எண் 100-க்கு போன் செய்தார்.

    உடனே தொண்டாமுத்தூர் போலீசாரும், ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்களிடமும் பூபதி, சண்டித்தனத்தை காட்டினார். அவர் போதையில் இருந்ததால் போலீசார் எச்சரித்து வீட்டில் போய் படுக்குமாறு கூறி விட்டு சென்றுவிட்டனர். போலீசாரை கண்டதும் பூபதி நல்லபிள்ளையாய் மாறி வீட்டில் போய் படுத்துக் கொண்டார். போலீசார் சென்ற சில நிமிடங்களில் மீண்டும் வீட்டில் இருந்து வெளியே வந்தார்.

    அந்த பகுதியில் உள்ள மின்கம்பத்தில் ஏறினார். மரம் ஏறும் தொழிலாளி என்பதால் சர, சரவென மின்கம்பத்தில் ஏறிவிட்டார். இதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தார். அவரை கீழே இறங்கும்படி கூறி சத்தம் போட்டனர். யார் சொல்வதையும் கேட்காமல் மின் கம்பத்தில் ஏறினார். சுதாரித்துக் கொண்ட பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அந்த பகுதியில் மின்சாரம் தடை செய்யப்பட்டது. இதனால் அதிர்ஷ்டவசமாக பூபதி தப்பினார். மின்கம்பத்தின் உச்சியில் அமர்ந்து கொண்டு கீழே இறங்க மாட்டேன் என அடம்பிடித்தார்.

    மீண்டும் போலீசுக்கு தகவல் பறக்க போலீசாரும் அங்கு வந்தனர். அவர்கள் பூபதியிடம் நைசாக பேசி அவரை கீழே வரச் செய்தனர். அதற்குள் விடிந்து அதிகாலை 3 மணி ஆகிவிட்டது. பின்னர் பூபதியை போலீசார் தொண்டாமுத்தூர் போலீஸ்நிலையம் கொண்டு சென்றனர்.

    இந்த சம்பவத்தால் பூபதி மட்டுமல்லாமல் அந்த பகுதி மக்களும் விடிய, விடிய தூங்காமல் தவிப்புக்கு ஆளானார்கள். பூபதியிடம் போலீசார் இன்று காலையில் விசாரணை மேற்கொண்டனர். 

    Tags:    

    Similar News