தமிழ்நாடு

வேலூரில் இருந்து சென்னை, பெங்களூருக்கு 9 இருக்கை கொண்ட விமான போக்குவரத்து

Published On 2023-12-14 06:04 GMT   |   Update On 2023-12-14 06:22 GMT
  • 97 ஏக்கர் பரப்பளவில், ரூ.65 கோடி செலவில் விமான நிலையம் கட்டப்பட்டது.
  • விமான நிலையத்தில் தற்போதுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை விமான நிலையத்தைச் சேர்ந்த குழுவினர் கடந்த வாரம் ஆய்வு செய்தனர்.

வேலூர்:

வேலூர் அடுத்த அப்துல்லாபுரத்தில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையொட்டி விமான நிலையம் உள்ளது. மத்திய அரசின் உதான் திட்டத்தின்கீழ் சீரமைக்கும் பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.

இதில் 97 ஏக்கர் பரப்பளவில், ரூ.65 கோடி செலவில் விமான நிலையம் கட்டப்பட்டது.

அதற்காக 850 மீட்டர் நீளமுள்ள விமான ஓடுதளப்பாதை தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் விமான முனையம், சரக்கு முனையம், தகவல் கட்டுப்பாட்டு அறை, ரேடார் கருவி, சிக்னல் கோபுரம், நிலைய அலுவலகம், பயணிகள் காத்திருக்கும் அறைகள் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில் விமான நிலையத்தில் தற்போதுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை விமான நிலையத்தைச் சேர்ந்த குழுவினர் கடந்த வாரம் ஆய்வு செய்தனர்.

விமான நிலைய நடவடிக்கைகளுக்கான அனுமதிகளை வழங்கும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ.) பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

மேலும் மத்தியப்படைகளுடன், உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விமான நிலையத்தில் முக்கியமான இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

இந்த நிலையில் வேலூரில் இருந்து சென்னை, பெங்களூருக்கு விமானம் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநிலங்களவையில் விமான போக்குவரத்து துறை இணை மந்திரி வி. கே.சிங் கூறியதாவது:-

உடான் திட்டத்தின் கீழ் வேலூர் விமான நிலைய பணிகள் நிறை வடைந்துள்ளன. விமான நிலையத்திற்கு உரிமை வழங்கும் பணி நடந்து வருகிறது.

அது தயாரான பிறகு 9 இருக்கைகள் கொண்ட விமானங்கள் வேலூரில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு இயக்கப்பட உள்ளது.

இது இந்த மாத இறுதிக்குள் தொடங்கப்படலாம் என கூறினார்.

வேலூர் பகுதியில் வசிப்பவர்கள் விரைவில் சென்னை மற்றும் பெங்களூருக்கு இதன் மூலம் விமான பயணத்தை மேற்கொள்ள முடியும்.

வேலூருக்கு மருத்துவம், பல்கலைக்கழகம் மற்றும் சுற்றுலா வரும் பயணிகளுக்கு இது ஒரு பெரிய பயன்பாடாக இருக்கும். விரைவில் விமான போக்குவரத்து தொடங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News