தமிழ்நாடு

அரிய வகை நோய் பாதிப்பு: 17 கோடி ரூபாய் ஊசிக்கு ஏங்கிய 6 மாத குழந்தை பரிதாப பலி

Published On 2023-08-14 07:04 GMT   |   Update On 2023-08-14 07:04 GMT
  • கைக்குழந்தையுடன் ரம்யா திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கலெக்டர் பாஸ்கர்பாண்டியனிடம் அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என மனு அளித்தார்.
  • சமூக ஆர்வலர்கள் சிலர் தங்களால் இயன்ற தொகையை குழந்தையின் சிகிச்சைக்கு வழங்கினர்.

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டம், குரிசிலாப்பட்டு அடுத்த வசந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபன் (வயது 36). இவர் தனியார் வங்கியில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரம்யா(31). இவர்களுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது.

இவர்களுக்கு கடந்த 2021-ம் ஆண்டு கவிமித்ரா என்ற பெண் குழந்தை பிறந்தது. ஆரம்பத்தில் ஆரோக்கியமாக இருந்த குழந்தை, 7 மாதம் ஆன பிறகு, உடல் நிலை பாதிக்கப்பட்டு திடீரென உயிரிழந்தது.

அதேபோல் தீபனும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார்.

இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 2-வதாக ரம்யாவுக்கு கவியாழினி (6 மாதம்) பெண் குழந்தை பிறந்தது.

பிறந்த உடன் ஆரோக்கியமாக இருந்த குழந்தை உடல் நிலையில் மாற்றம் தெரியவந்தது. 3 மாதங்கள் ஆன பிறகும் கூட குழந்தையின் கால்களில் அசைவு ஏதும் ஏற்படவில்லை. இதையடுத்து, சில நாட்கள் கழித்து கழுத்தும் நிற்கவில்லை. அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டதால் அருகிலுள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.

டாக்டர்கள் குழந்தையை வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுமாறு பரிந்துரை செய்தனர்.

வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள், கவியாழினி உலகிலேயே அரிய வகை நோயான "ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி' வகை நோய் தாக்கியுள்ளதாகவும், உலகில் ஒரு சிலருக்கு மட்டுமே இது போன்ற நோய் பாதிப்பு இருப்பதாகவும், உடனடியாக குழந்தைக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் குழந்தையை காப்பாற்றுவது சுலபமல்ல, இதற்கான ஊசி இந்தியாவிலேயே இல்லை, அமெரிக்காவில் தான் உள்ளது, அந்த ஊசியின் விலை ரூ.17 கோடி என டாக்டர்கள் கூறினர்.

இதனையடுத்து கைக்குழந்தையுடன் ரம்யா திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கலெக்டர் பாஸ்கர்பாண்டியனிடம் அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என மனு அளித்தார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. சமூக ஆர்வலர்கள் சிலர் தங்களால் இயன்ற தொகையை குழந்தையின் சிகிச்சைக்கு வழங்கினர்.

ஆனால் அதிகாரிகள் உதவிக்கரம் நீட்டவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 6 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News