தமிழ்நாடு

சென்னை மாநகராட்சி பகுதிகளில் 92 சதவீத மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு: கமிஷனர் ராதாகிருஷ்ணன்

Published On 2023-10-10 03:08 GMT   |   Update On 2023-10-10 03:08 GMT
  • சென்னை மாநகராட்சியில் ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 369 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 37 இடங்கள் தாழ்வான இடங்கள் என கண்டறியப்பட்டுள்ளது

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் சமீபத்தில் நடந்தது. இதில், சென்னை பெருநகர மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் பங்கேற்றார்.

மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்துகள் குறித்து 'தினத்தந்தி'க்கு அவர் சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- கலெக்டர்கள் மாநாட்டில், சென்னை மாநகராட்சி சார்பில் நீங்கள் முன்வைத்த கோரிக்கைகள், அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய அறிவுறுத்தல்கள் என்ன?

பதில்:- சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். இந்த ஆண்டு 9 ஆயிரத்து 848 எண்ணிக்கையிலான சாலைகள் அமைக்கும் பணி, 1,156 கி.மீட்டருக்கு, ரூ.1,174 கோடியே 46 லட்சம் மதிப்பீட்டில் நடக்கிறது. இந்த பணிகளை விரைவில் முடிக்க முதலமைச்சர் அறிவுறுத்தினார். பல்வேறு துறைகளில் நடக்கும் சாலை வெட்டுப் பணிகளை விரைவில் நிறைவு செய்யவும், மெட்ரோ ரெயில் பணிகள் நடக்கும் பகுதிகளில் சாலை பணிகளை முடிக்கவும் முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

கேள்வி:- விரைவில், பருவமழை தொடங்க உள்ளது. மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் எந்த கட்டத்தில் உள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய அறிவுரைகள் என்ன?

சென்னை மாநகராட்சி

 பதில்:- சென்னை பெருநகர மாநகராட்சியில் 11,516 எண்ணிக்கையிலான 2,674 கி.மீட்டர் மழைநீர் வடிகால்கள் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் வரை இருந்தது. இப்போது, 3,480 கி.மீட்டர் மழைநீர் வடிகால்கள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. புதிதாக எடுக்கப்பட்ட 1,501 கி.மீட்டர் திட்டப்பணிகளில் 1,390 கி.மீட்டர் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 92.61 சதவீத மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகளையும் விரைவில் நிறைவு செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

புதிதாக சென்னை மாநகராட்சியில் இணைக்கப்பட்ட விரிவாக்க பகுதிகளில், கழிவுநீர் அகற்றும் வசதிகள், குடிநீர் வழங்கல் வசதிகள் இல்லாத காரணத்தால் அந்த பகுதிகள் மாநகராட்சி தரத்துக்கு கொண்டு வரப்படவில்லை. அங்கு மின்சாரத்துறை உட்பட பல்வேறு துறை சார்ந்த பணிகள் நிறைவடைந்ததும், சாலை பணிகள் முழுமையாக முடிக்கப்படும்.

கேள்வி:- சென்னை மாநகராட்சியில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்?

பதில்:- உலகளவில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம். இந்தியாவில் பீகார், மேற்கு வங்கம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இப்போது அதிகரித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 369 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு காரணமான 'ஏடிஸ்' கொசு உருவாவதை தடுக்கவும், காய்ச்சல் வந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த, வீடுகள், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் கண்காணிக்கப்படுகின்றன. கொசு ஒழிப்புக்கு தேவையான மருந்துங்கள் கையிருப்பில் உள்ளன. மாநகராட்சிக்கு உட்பட்ட சுகாதார மையங்களில் நிலவேம்பு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதுதவிர்த்து, மலேரியா, எலி காய்ச்சல், வயிற்றுப் போக்கு ஆகியவற்றை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கேள்வி:- விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

பதில்:- சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 37 இடங்கள் தாழ்வான இடங்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இதில், 9 இடங்கள் அதி தாழ்வான பகுதிகளாக உள்ளது. ஆபத்தான மரக்கிளைகள் வெட்டும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. புயல் தாக்கத்தில் இருந்து மக்களை காக்க, 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளது. சென்னையில் 16 சுரங்க பாதைகளில் மழைநீர் தேங்காமல் இருக்க 169 பம்பு செட்டுகள் தயார் நிலையில் உள்ளன. மீட்பு வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

கேள்வி:- சென்னையில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுகின்றன. அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்?

பதில்:- தெரு நாய்களை பிடிக்க 16 வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது. பிடிக்கப்படும் தெரு நாய்களுக்கு, வெறி நாய்க்கடி நோய் வராமல் தடுக்க தடுப்பூசி போடப்படுகிறது. நாய்கள் குணமடைந்ததும், நாய் இனக்கட்டுப்பாட்டு விதி 2023-ன்படி பிடித்த இடத்திலேயே விடப்படும். நடப்பாண்டு 11 ஆயிரத்து 220 தெரு நாய்களுக்கு இனக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News