தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் மொத்தம் 9.58 லட்சம் பெண்கள் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பம்

Published On 2023-08-21 10:46 IST   |   Update On 2023-08-21 10:46:00 IST
  • மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்களை ஆய்வு செய்து சரிபார்க்கும் பணி நாளை மறுநாள் முதல் நடைபெறுகிறது.
  • பயனாளிகள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு அவர்களின் வங்கி கணக்கில் மாதந்தோறும் உதவித்தொகை ரூ.1000 வழங்கப்படும்.

சென்னை:

தமிழக அரசு அறிவித்து உள்ள மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 மாதந்தோறும் வழங்கும் திட்டம் அடுத்த மாதம் 15-ந்தேதி முதல் தொடங்குகிறது.

இதற்கான பயனாளிகள் கடந்த மாதம் 25-ந்தேதி முதல் விண்ணப்பிக்க தொடங்கினர். தமிழகம் முழுவதும் 2 கட்டமாக முகாம்கள் மூலம் விண்ணப்பப் பதிவு நடந்தது.

விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்கள் 18-ந்தேதி முதல் நேற்று வரை 3 நாட்கள் நடைபெற்றன. இரண்டு கட்டமாக முகாம்களில் பதிவு செய்யாதவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.

சென்னையில் 3 நாட்கள் விடுபட்டவர்களுக்கு நடந்த சிறப்பு முகாம்கள் மூலம் 50,427 பேர் பதிவு செய்தனர். சென்னையில் மொத்தம் 9 லட்சத்து 58 ஆயிரத்து 807 குடும்பத்தலைவிகள் நேற்று வரை விண்ணப்பங்களை பதிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்களை ஆய்வு செய்து சரிபார்க்கும் பணி நாளை மறுநாள் (23-ந்தேதி) முதல் நடைபெறுகிறது. விண்ணப்பித்த படிவங்களில் முறையான தகவல் இல்லாத சந்தேகம் உள்ள படிவங்களை மட்டும் ஆய்வு செய்கிறார்கள்.

அந்த விண்ணப்பத்திற்குரிய குடும்பத் தலைவிகள் வீடுகளில் நேரில் சென்று அதிகாரிகள் சரிபார்க்கின்றனர். 1428 ரேசன் கடைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு ரேசன் கடைக்கு ஒரு அதிகாரி வீதம் 1428 பேர் இந்த பணியில் ஈடுபடுகிறார்கள். சென்னையில் ஒரு வாரம் இந்த பணி நடைபெறுகிறது. தகுதியானவர்கள் யாரும் விடுபட்டு விடாமல் கவனமுடன் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.

அதன்பின்னர் பயனாளிகள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு அவர்களின் வங்கி கணக்கில் மாதந்தோறும் உதவித்தொகை ரூ.1000 வழங்கப்படும்.

இதற்கிடையில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை எனவும் பெண்கள் எப்போதும் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News