தமிழ்நாடு

மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்த 7 பேர் டிஸ்சார்ஜ்- மேலும் 2 சாராய வியாபாரிகள் கைது

Published On 2023-05-20 04:13 GMT   |   Update On 2023-05-20 04:13 GMT
  • சாராய வியாபாரிகளான அமரன், ஆறுமுகம், ரவி, மண்ணாங்கட்டி,முத்து, குணசீலன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
  • மரக்காணம் கள்ளச்சாராய வழக்கில் இதுவரை 11 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

விக்கிரவாண்டி:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில கடந்த 13-ந் தேதி கள்ளச்சாராயம் குடித்த 60 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டனர்.

இதில் சிகிச்சை பலனின்றி ஒரு பெண் உள்பட 13 பேர் பலியானார்கள்.12 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும். ஒரு பெண் உள்பட 35 பேர் பொது மருத்துவ பிரிவிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.

இதில் எக்கியார் குப்பத்தை சேர்ந்த செந்தமிழ் (35), ராமலிங்கம் (55), கோவிந்தன் (39), தென்னரசன் (33), ரமேஷ் (31), வேல் முருகன் (51), மற்றொரு ரமேஷ் (52), ஆகிய 7 பேர் பூரண குணமடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அவர்கள் வேன் மூலம் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விழுப்புரம் ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன், தனி தாசில்தார் ஜோதிவேல், மருத்துவக்கல்லூரி டீன் கீதாஞ்சலி, உண்டு உறைவிட மருத்துவர் ரவக்குமார் மற்றும் டாக்டர்கள் குழுவினர் அவர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கி அனுப்பி வைத்தனர்.

எக்கியார் குப்பம் கள்ளச்சாராய விற்பனை வழக்கில் சாராய வியாபாரிகளான அமரன், ஆறுமுகம், ரவி, மண்ணாங்கட்டி,முத்து, குணசீலன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

சாராயம் தயாரிக்க மெத்தனால் சப்ளை செய்ததாக புதுச்சேரியை சேர்ந்த பர்கத்துல்லா என்ற ராஜா, ஏழுமலை, சென்னை ரசாயன ஆலை உரிமையாளர் இளைய நம்பி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் மெத்தனால் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த வேலூர் குடியாத்தம் பகுதியை சேர்ந்த ராபர்ட் என்கிற பிரேம் குமார் (54), வானூர் அடுத்த பெரம்பை நடுப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபு என்கிற வெங்கடாஜலபதி (40) ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் 2 பேரும் திண்டிவனம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதன் மூலம் மரக்காணம் கள்ளச்சாராய வழக்கில் இதுவரை 11 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Tags:    

Similar News