தமிழ்நாடு

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் கூடுதலாக 500 இடைநிலை ஆசிரியர்களை நிரப்ப அனுமதி

Published On 2024-01-05 03:00 GMT   |   Update On 2024-01-05 03:00 GMT
  • 2023-24-ம் கல்வியாண்டில் கண்டறியப்பட்ட 8 ஆயிரத்து 643 எண்ணிக்கையிலான இடங்களில், 1000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப ஏற்கனவே அனுமதி பெறப்பட்டது.
  • அதிகமாக காலியாக உள்ள மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எண்ணிக்கையுடன் பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்ய வேண்டும்.

சென்னை:

பள்ளிக்கல்வித் துறையில் தொடக்கக்கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நேரடி நியமனம் மூலம் நிரப்ப வேண்டிய இடைநிலை ஆசிரியர் விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, தொடக்கக் கல்வி இயக்குனரின் கருத்துரு, அரசின் விரிவான பரிசீலனைக்கு பிறகு 2023-24-ம் கல்வியாண்டில் கண்டறியப்பட்ட 8 ஆயிரத்து 643 எண்ணிக்கையிலான இடங்களில், 1000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப ஏற்கனவே அனுமதி பெறப்பட்டது.

இந்த நிலையில் அந்த பணியிடங்களுடன் கூடுதலாக 500 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பிட தொடக்கக் கல்வி இயக்குனருக்கு அனுமதி அளித்து அரசு ஆணையிட்டு இருப்பதாக பள்ளிக்கல்வித் துறை செயலாளர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பால் அனுமதிக்கப்பட்ட அளவைவிட உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை, அதிகமாக காலியாக உள்ள மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எண்ணிக்கையுடன் பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்ய வேண்டும்.

தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள 1,500 இடைநிலை ஆசிரியர்களில் தேர்வு செய்யப்படுபவர்களை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகமாக காலியாக உள்ள மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும். அவ்வாறு முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யும்போதே அவர்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அந்த மாவட்டங்களில் பணி புரிய வேண்டும் என்ற நிபந்தனையை நியமன ஆணையில் குறிப்பிட்டு நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News