காசிமேடு துறைமுகத்தில் 50 டன் மீன்கள் விற்பனைக்கு குவிந்தது- வியாபாரிகள் மகிழ்ச்சி
- கடந்த மாதம் புரட்டாசி என்பதால் மீன் விற்பனை மந்தமானது.
- காசிமேட்டில் 2 மாதத்துக்கு பின்னர் ஞாயிற்றுக்கிழமையில் 50 டன் மீன்கள் விற்பனைக்கு வந்தது.
ராயபுரம்:
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 1,200 விசைப்படகுகள், 800 பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். டீசல் விலை உயர்வு காரணமாக பெரும்பாலான விசைப்படகு மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் உள்ளனர்.
கடந்த மாதம் புரட்டாசி என்பதால் மீன் விற்பனை மந்தமானது. கடலுக்குள் செல்லும் விசைப்படகுகளின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது.
இந்த நிலையில் 2 மாதத்துக்கு பின்னர் ஞாயிற்றுக்கிழமையான நேற்று 50 டன் மீன்கள் விற்பனைக்கு குவிந்தது. சுமார் 30-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை திரும்பியதால் மீன் வரத்து அதிகமாக இருந்தன.
நவரை, கானாகத்தை, வஞ்சிரம், நெத்திலி, வவ்வால், நண்டு, இறால் மீன்கள் குவிந்து இருந்தன என்றாலும் கடந்த வாரத்தை ஒப்பிடும்போது மீன் விலை சற்று அதிகரித்து இருந்தது. ரூ.800-க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் ரூ.1000 வரை விற்கப்பட்டது. மீன் வியாபாரம் களை கட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இது குறித்து மீன் வியாபாரிகள் கூறியதாவது:-
காசிமேட்டில் 2 மாதத்துக்கு பின்னர் ஞாயிற்றுக்கிழமையில் 50 டன் மீன்கள் விற்பனைக்கு வந்தது. வஞ்சிரம், வவ்வால் மீன், இறால் மற்றும் பெரிய அளவிலான நண்டுகள் உட்பட பல்வேறு வகையான மீன்கள் கொண்டு வரப்பட்டன. இவற்றில் வவ்வால், கானங்கெழுத்தி, வஞ்சிரம் ஆகிய மீன்கள் அதிக விலை கொண்டவை. அசைவ பிரியர்கள் மற்றும் ஓட்டல்களுக்கு இவைதான் அதிக அளவில் விரும்பி வாங்கப்படும்.
மொத்த விற்பனையில் நவரை விலை ரூ. 1,800 ஆக இருந்தது. சில்லரை விற்பனையில் இது கிலோ ரூ.180-க்கு விற்கப்பட்டது. வரும் நாட்களில், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அதிக வகை மற்றும் அதிக அளவில் மீன்கள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம் என்றனர்