தமிழ்நாடு

நிதி நிறுவன மோசடி வழக்கில் தைதான 2 பேரை படத்தில் காணலாம்.

கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.50 லட்சம் மோசடி - 2 பேர் கைது

Published On 2023-06-12 04:53 GMT   |   Update On 2023-06-12 04:53 GMT
  • சீட்டுக்கான காலக்கெடு முடிவுற்ற போதிலும் பலருக்கு பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
  • பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் சுமார் 60 பேர் கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

சுவாமிமலை:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் உப்புக்காரத் தெருவில் கடந்த 2 ஆண்டுகளாக நிதி நிறுவனத்தை ராஜேஷ் கண்ணா என்பவர் நடத்தி வந்தார்.

இந்நிறுவனத்தில் மேலாளராக நரேந்திரன் என்பவர் பணியாற்றி வந்தார்.

நிரந்தர வைப்பு நிதியாக 1 லட்ச ரூபாய் முதலீடு செய்தால், மாதம் 4000 ரூபாய் வட்டியாக தருவதாக கூறியிருந்தனர். இதில் 200க்குமேற்பட்டோர் முதலீடும் செய்திருந்தனர்.

மேலும் பலர் மாதாந்திர சீட்டும் கட்டியிருந்தனர். சீட்டுக்கான காலக்கெடு முடிவுற்ற போதிலும் பலருக்கு பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

கும்பகோணத்தில் இயங்கி வந்த தனியார் நிதி நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் திடீரென மூடப்பட்டுள்ளது.

இங்கு முதலீடு செய்தவர்கள் இந்நிறுவன உரிமையாளர் ராஜேஷ் கண்ணாவை பலமுறை நேரில் சந்தித்து தங்களுக்கு சேர வேண்டிய பணத்தை கேட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து பலருக்கு ராஜேஸ்கண்ணா செக் கொடுத்துள்ளார்.

கொடுத்த செக்குகள் அனைத்தும் கணக்கில் பணம் இல்லை என செக் ரிட்டன் ஆகி உள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் சுமார் 60 பேர் கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த 60 நபர்கள் கொடுத்த புகார் அடிப்படையில் மோசடியில் செய்யப்பட்ட தொகை சுமார் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கும்பகோணம் போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் குமார் தலைமையில் தனி படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் திருச்சியில் பதுங்கியிருந்த இந்நிறுவன உரிமையாளர் ராஜேஷ் கண்ணா மற்றும் மன்னார்குடியில் பதுங்கியிருந்த நரேந்திரன் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் இவர்கள் கும்பகோணம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்

இந்தச் சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News