தமிழ்நாடு

எண்ணூரில் இருந்து புத்தூருக்கு ரூ.50 கோடியில் ரெயில் பாதை- பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு

Published On 2023-02-06 06:34 GMT   |   Update On 2023-02-06 06:34 GMT
  • திருவள்ளூர்-புத்தூர் கோட்டம் நிரம்பியதால் கூடுதல் சரக்குகளை கையாள முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  • மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கு 143.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய ரெயில் வழித்தடம் அமைக்கப்படுகிறது.

சென்னை:

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தில் புதிய வழித்தடங்களில் ரெயில் பாதை அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் புதிதாக 9 வழித்தடங்களில் ரெயில் பாதைகள் அமைக்கப்பட உள்ளன. ரூ.1057 கோடி செலவில் இந்த பாதைகள் அமைக்கப்படுகிறது.

சென்னை எண்ணூர் துறைமுகமான அத்திப்பட்டில் இருந்து ஆந்திர மாநிலம் புத்தூருக்கு 88 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக பட்ஜெட்டில் ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா, ஆந்திரா மற்றும் எண்ணூர் துறைமுகத்துக்கு இரும்பு தாது மற்றும் நிலக்கரி கண்டெய்னர்களை கொண்டு செல்ல அத்திப்பட்டு-புத்தூர் வழித்தடம் அவசியமாகும்.

தற்போது திருவள்ளூர்-புத்தூர் கோட்டம் நிரம்பியதால் கூடுதல் சரக்குகளை கையாள முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வழியாக திருவண்ணாமலைக்கு 70 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய ரெயில்பாதை அமைக்கப்படுகிறது.

இதற்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் திண்டிவனம்-திருவண்ணாமலை இடையே 8 ரெயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

திண்டிவனத்தில் இருந்து ஆரணி, வாலாஜா வழியாக நகரிக்கு 180 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டில் இருந்து மாமல்லபுரம், புதுச்சேரி வழியாக கடலூருக்கு 155 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் நிலம் கணக்கெடுப்பு பணிகள் முடிக்கப்பட உள்ளது.

மேலும் மொரப்பூரில் இருந்து தர்மபுரிக்கு 36 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய வழித்தடம் அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

ஈரோட்டில் இருந்து பழனிக்கு 91 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கு 143.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய ரெயில் வழித்தடம் அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.114 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

ஸ்ரீபெரும்புதூரில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு 60 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.57.9 கோடி ஒதுக்கப்படுகிறது. ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு 17.2 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட உள்ள புதிய ரெயில் பாதைக்கு ரூ.385.9 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த புதிய ரெயில் பாதைகள் மாமல்லபுரம், புதுச்சேரி, ராணிப்பேட்டை, கடலூர், திருவண்ணாமலை, தர்மபுரி மற்றும் தனுஷ்கோடியை தமிழகத்தின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும்.

மேலும் தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நேரடி ரெயில் இயக்குவதற்கும் வழிவகுக்கும்," என்றார்.

Tags:    

Similar News