தமிழ்நாடு

மானை வேட்டையாடி கைதான 4 பேரை காணலாம்.

சத்தியமங்கலம் வனப்பகுதியில் மானை வேட்டையாடிய 4 பேர் கைது

Published On 2023-12-19 06:26 GMT   |   Update On 2023-12-19 06:26 GMT
  • கொத்தமங்கலம் வனப்பகுதி போலிபள்ளம் பகுதியில் வனத்துறை சார்பில் கட்டை அமைத்து தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு உள்ளது.
  • வனத்துறையினர் வலைகள் மற்றும் மான் கறி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தாளவாடி, பவாளிசாகர் உள்பட 10 வன சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கடி, மான் உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

இந்த வனப்பகுதியில் ஒரு சிலர் அனுமதியின்றி நுழைந்து மான் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடி வருகிறார்கள். வனத்துறை அதிகாரிகளும் அடிக்கடி ரோந்து சென்று வன விலங்குகளை வேட்டையாடும் கும்பலை பிடித்து அபராதம் விதிப்பது மற்றும் கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். ஆனாலும் சிலர் வனப்பகுதியில் புகுந்து மான் உள்ளிட்டவைகளை வேட்டையாடுவது தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் கொத்தமங்கலம் வனப்பகுதி போலிபள்ளம் பகுதியில் வனத்துறை சார்பில் கட்டை அமைத்து தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு உள்ளது. அந்த குட்டையில் மான்கள் தண்ணீர் குடித்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் பவானிசாகர் வன சரகத்துக்குட்பட்ட கொத்தமங்கலம் காப்பு காடு வனப்பகுதியில் வன சரகர் சிவகுமார், வன காப்பாளர் மற்றும் வனப்பகுதி பணியாளர்கள் ரோந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது கொத்தமங்கலம் வனப்பகுதி போலி பள்ளம் பகுதியில் 4 பேர் நைலான் வலைகளுடன் சுற்றி கொண்டு இருந்தனர். இதையடுத்து வனத்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சத்தியமங்கலம் அடுத்த புதுப்பீர் கடவு பகுதியை சேர்ந்த சின்னசாமி (44), கார்த்திகேயன் (21), திருப்பூரை சேர்ந்த சதீஸ்குமார் (23), வெங்கடேஷ் (28) என்பதும், நைலான் வலைகள் மூலம் மான்களை வேட்டையாடியதும் தெரிய வந்தது.

இதையடுத்து வனத்துறையினர் அவர்களிடம் இருந்து வலைகள் மற்றும் மான் கறி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். இதை தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைத்தனர். 

Tags:    

Similar News