தமிழ்நாடு

பேக்கரி கடையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது எடுத்த படம்.

பேக்கரியில் முட்டை பப்ஸ், கேக் சாப்பிட்ட 3 பேருக்கு வாந்தி-மயக்கம்: கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை

Published On 2023-10-18 05:43 GMT   |   Update On 2023-10-18 05:43 GMT
  • வில்லரசம் பட்டி நால்ரோட்டில் உள்ள ஒரு பேக்கரியில் முட்டை பப்ஸ் மற்றும் கேக் ஆகியவற்றை சாப்பிட்டுள்ளனர்.
  • சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள 3 பேரிடமும் நடந்த விபரங்கள் குறித்து அதிகாரிகள் கேட்டறிந்தனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் நசியனூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி தாமரை செல்வி(30). இவர்களது குழந்தை தக்ஷினி(4). உறவினர் சிவகாமி (30). இந்த நிலையில் நேற்று மதியம் தாமரைசெல்வி தனது மகள் மற்றும் உறவினர் சிவகாமி உடன் ஈரோடு வந்துவிட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது வில்லரசம் பட்டி நால்ரோட்டில் உள்ள ஒரு பேக்கரியில் முட்டை பப்ஸ் மற்றும் கேக் ஆகியவற்றை சாப்பிட்டுள்ளனர். வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்திலேயே தாமரைசெல்வி, சிவகாமி, தக்ஷினி ஆகிய 3 பேருக்கும் வயிற்றுவலி, வாந்தி பேதி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் தங்க விக்னேஷ் உத்தரவின்பேரில் அருண்குமார் தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பேக்கரியில் இன்று காலை சோதனை நடத்தினர். அங்கு வைக்கப்பட்டிருந்த பப்ஸ், கேக் மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களின் மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்துக்கொண்டதோடு மறுஅனுமதி வரும் வரை வேறு எந்த உணவு பொருட்களையும் தயாரிக்கக்கூடாது என்று உத்தரவிட்டனர்.

மேலும் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள 3 பேரிடமும் நடந்த விபரங்கள் குறித்து கேட்டறிந்தனர். பேக்கரியில் சேகரிக்கப்பட்ட உணவு பொருட்கள் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

Tags:    

Similar News