தமிழ்நாடு

பவானி ஆற்றில் மூழ்கிய மேலும் 3 பேரின் கதி என்ன?: 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்

Published On 2023-02-12 08:27 GMT   |   Update On 2023-02-12 08:27 GMT
  • தீயணைப்புத்துறையினர் பவானி ஆறு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • ஒரே நாளில் 5 பேர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேட்டுப்பாளையம்:

கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (53). இவர் சிறுமுகை பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார்.

இவரது தங்கை பாக்கியா (45). இவர் சிறுமுகையில் அரசு மருத்துவமனை எதிரே புதிதாக வீடு வாங்கி உள்ளார். இந்த வீட்டில் இன்று கிரகபிரவேசம் நடப்பதாக இருந்தது.

இதில் கலந்து கொள்வதற்காக பாக்கியாவின் மருமகள் ஜமுனா (25), அவரது நண்பர்களான நரசிம்ம நாயக்கன்பாளையத்தை சேர்ந்த கஸ்தூரி (30), சகுந்தலா (52) ஆகியோர் சிறுமுகைக்கு வந்தனர்.

இந்த நிலையில் பாக்கியா, அவரது மருமகள் ஜமுனா, கஸ்தூரி, சகுந்தலா ஆகியோர் மாலையில் சிறுமுகை வச்சினாம்பாளையத்தில் உள்ள பவானி ஆற்றுக்கு குளிக்க சென்றனர். அவர்களுடன் பாலகிருஷ்ணனும் வந்தார்.

4 பேரும், ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது பில்லூர் அணையில் தண்ணீர் திறந்துவிட்டதையொட்டி பவானி ஆற்றில் வெள்ளம் வந்தது. இதனால் ஆற்றில் குளித்து கொண்டிருந்த 4 பேரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.

இதை பார்த்த பாலகிருஷ்ணன் உடனடியாக சென்று ஆற்றில் இறங்கி அவர்களை மீட்க போராடினார். ஆனால் அவரும் தண்ணீரில் தத்தளிக்க தொடங்கினார்.

இதுகுறித்து தீயணைப்பு துறை, வருவாய் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் அவர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஆற்றில் இறங்கி தேடினர். சிறிது நேரத்தில் பாக்கியா(53), ஜமுனா (30) ஆகியோர் பிணமாக மீட்கப்பட்டனர். அவர்களின் உடல்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

மேலும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்த பாலகிருஷ்ணன், கஸ்தூரி ஆகியோர் மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தொடர்ந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்ட உயிரிழந்த சகுந்தலாவின் உடலை மீட்கும் பணியில் தீயணைப்புதுறையினர் ஈடுபட்டனர். ஆனால் இரவாகி விட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று காலை 2-வது நாளாக உடலை தேடும் பணி தொடங்கியது.

தீயணைப்புத்துறையினர் பவானி ஆறு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை அவரது உடல் மீட்கப்படவில்லை. அவரது உயிருடன் இருக்கிறாரா? என்பது தெரியவில்லை. தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதேபோல் பவானி ஆற்றில் குளித்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கோவை சிங்காநல்லூரை சேர்ந்த ஜீவானந்தம் (16), உப்பிலிபாளையத்தை சேர்ந்த கவுதம் (16) ஆகியோரின் கதி என்ன என்பது தெரியவில்லை. இவர்கள் 2 பேரையும் தேடும் பணியும் இன்று 2-வது நாளாக நடக்கிறது. மேட்டுப்பாளையம் தாசில்தார் மாலதி, மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், முருகநாதன் ஆகியோர் மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ நடந்த இடம் மற்றும் அருகே உள்ள பகுதிகளில் தேடும் பணியானது நடக்கிறது.

மேட்டுப்பாளையம் பகுதியில் ஒரே நாளில் 5 பேர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News