தமிழ்நாடு செய்திகள்

தெப்பக்காடு அருகே கரடி தாக்கி வேட்டை தடுப்பு காவலர்கள் 3 பேர் படுகாயம்

Published On 2022-07-28 10:50 IST   |   Update On 2022-07-28 10:50:00 IST
  • வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீருக்காக வனத்தை விட்டு வெளியேறி அருகே உள்ள குடியிருப்புக்குள் நுழைந்து விடுகிறது.
  • வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் தீவிர ரோந்து பணியும் மேற்கொண்டு வருகின்றனர்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம், மசினகுடி பகுதியில் காட்டு யானைகள், கரடிகள், மான்கள், சிறுத்தை, புலி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீருக்காக வனத்தை விட்டு வெளியேறி அருகே உள்ள குடியிருப்புக்குள் நுழைந்து விடுகிறது.

வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் தீவிர ரோந்து பணியும் மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று மாலை மசினகுடி வனப்பகுதியில் வேட்டைத்தடுப்பு காவலா்களான மாரி, மாதன், காலன், மாதேஷ் ஆகிய 4 போ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு புதருக்குள் பதுங்கியிருந்த கரடி திடீரென வெளியில் வந்து தாக்க முயன்றது.

இதை பார்த்ததும் அதிர்ச்சியான 4 பேரும் அங்கிருந்து தப்பியோடினர். ஆனால் கரடி விடாமல் விரட்டி சென்று 3 பேரை தாக்கியது.

இதில் மாரி என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற 2 பேருக்கு கை, கால்களில் லேசான காயம் ஏற்பட்டது. ஒருவர் எந்தவித காயமும் இன்றி தப்பினார்.

பின்னர் அவர் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

தகவல் அறிந்து வனத்துறையினர் விரைந்து வந்து கரடியை அங்கிருந்து விரட்டி காயம் அடைந்த 3 பேரையும் மசினகுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே கரடி தாக்கியதில் பலத்த காயம் அடைந்த மாரி என்பவர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கரடி தாக்கி காயம் அடைந்த வேட்டை தடுப்பு காவலர்கள்

Tags:    

Similar News