தமிழ்நாடு

துறைமுகத்தில் இன்றும் 2ம் எண் கூண்டு ஏற்றம்- தூத்துக்குடியில் திடீர் சூறாவளியால் வாகன ஓட்டிகள் அவதி

Published On 2023-05-12 06:36 GMT   |   Update On 2023-05-12 06:36 GMT
  • தூத்துக்குடி நகரக்கு வெளியே பாளை சாலையில் புழுதியுடன் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத புழுதிக்காற்று வீசியது.
  • சுமார் 40 நிமிடங்கள் வரை நீடித்த சூறாவளி காற்று ஓய்ந்து பின்னர் மீண்டும் இயல்புநிலை திரும்பியது.

தூத்துக்குடி:

வங்கக்கடலில் உருவாகி உள்ள மோக்கா புயல் வருகிற 14-ந்தேதி கரையை கடக்கிறது.

இதன் காரணமாக தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. புயல் எச்சரிக்கையால் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் புயல் எச்சரிக்கையை தெரிவிக்கும் வகையில் நேற்று முன்தினம் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மொக்கா புயல் தீவிர புயலாக மாறியதால் நேற்று 2-ம் எண் கூண்டு ஏற்றப்பட்டது. தொடர்ந்து இன்றும் தூத்துக்குடி துறைமுகத்தில் அதேநிலையில் நீடிக்கிறது.

தூத்துக்குடியில் நேற்று பகலில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்ட நிலையில் பிற்பகலில் கடுமையான வெயில் வாட்டியது.

மாலையில் திடீரென மாற்றம் ஏற்பட்டு பலத்த சூறாவளி காற்று வீசியது. குறிப்பாக தூத்துக்குடி நகரக்கு வெளியே பாளை சாலையில் புழுதியுடன் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத புழுதிக்காற்று வீசியது. வாகனங்களில் சென்றவர்கள் கடுமையாக திண்டாடினர்.

இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் ஆங்காங்கே நிறுத்தினர். சுமார் 40 நிமிடங்கள் வரை நீடித்த சூறாவளி காற்று ஓய்ந்து பின்னர் மீண்டும் இயல்புநிலை திரும்பியது. இதனால் சில இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது.

தொடர்ந்து மாலையில் புதுக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இன்று காலை ஒருசில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

Tags:    

Similar News