தமிழ்நாடு

கைதான கிருஷ்ணகுமார் - தொண்டாமுத்தூரில் கைப்பற்றப்பட்ட ரூ.2.17 லட்சத்தை பறக்கும் படையினர் பேரூர் தாலுகா தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்த காட்சி. 

பறக்கும்படை சோதனையில் சிக்கிய 28 கிலோ குட்கா பறிமுதல்: டிரைவர் கைது

Published On 2024-03-19 10:08 GMT   |   Update On 2024-03-19 10:08 GMT
  • தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரவீந்திரன் தலைமையிலான குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
  • ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு குட்காவை எடுத்து வந்தது தெரியவந்தது.

கவுண்டம்பாளையம்:

கோவை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

பறக்கும் படையினர் மாவட்ட முழுவதும் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை கணுவாய்-ஆனைகட்டி செல்லும் சாலையில் தண்ணீர் பந்தல் பஸ் நிறுத்தம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரவீந்திரன் தலைமையிலான குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்.

காருக்குள் மூட்டைகள் இருந்தன. இதையடுத்து அதிகாரிகள் அதனை பிரித்து பார்த்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அதில், குட்கா இருந்ததை கண்டுபிடித்தனர்.

மொத்தம் 28 கிலோ குட்கா இருந்தது. இதையடுத்து போலீசார் குட்காவை பறிமுதல் செய்தனர்.

பின்னர் காரில் இருந்த டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த கிருஷ்ணகுமார்(வயது40) என்பதும், டிரைவராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.

மேலும் இவர் ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு குட்காவை எடுத்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கிருஷ்ணகுமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கார் மற்றும் 28 கிலோ குட்காவை பறிமுதல் செய்து தடாகம் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொண்டாமுத்தூர் அடுத்த நரசீபுரம் சாலையில் குபேரபுரி என்ற இடத்தில் மாநில வரி அலுவலர் மார்ஷல் தலைமையிலான பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை மறித்து சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவரிடம் ரூ.2 லட்சத்து 17 ஆயிரத்து 270 வைத்திருந்தார். இதுதொடர்பாக அவரிடம் விசாரித்த போது, காய்கறி வியாபாரம் பார்த்து வருவதாகவும், அதில் கிடைத்த பணத்தை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும்படையினர் ரூ.2.17 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அதனை பேரூர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இதேபோல் மதுக்கரை, தொண்டாமுத்தூர், காரமடை உள்ளிட்ட பகுதிகளில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு 5.52 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News