தமிழ்நாடு
மழை

தொடர் மழை- சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று மேலும் 9 அடி உயர்வு

Published On 2022-05-20 10:26 GMT   |   Update On 2022-05-20 10:26 GMT
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்துள்ளது.
நெல்லை:

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக குளிர்ந்த காற்றுடன் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும், அணைப்பகுதியிலும் கனமழை பெய்கிறது. இதனால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக பாபநாசம் அணைப்பகுதியில் 19 மில்லிமீட்டரும், சேர்வலாறு பகுதியில் 18 மில்லிமீட்டரும் மழை பெய்தது. தொடர்ந்து அம்பை, களக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது சாரல் மழை பெய்தது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக நேற்று நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் 5 அடி உயர்ந்தது.

இந்நிலையில் இன்று மேலும் 4½ அடி உயர்ந்தது. 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட அணையின் இன்றைய நீர்மட்டம் 59.65 அடியாக இருந்தது. அணைக்கு நேற்றைய நீர்வரத்து விநாடிக்கு 2,666 கனஅடியாக இருந்த நிலையில் இன்று மேலும் உயர்ந்து 3,024.65 கனஅடிநீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 354.79 கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

இதேபோல் 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணையில் நேற்று நீர்மட்டம் 7 அடி உயர்ந்த நிலையில் இன்று மேலும் 9 அடி உயர்ந்து 79.26 அடியாக உள்ளது.

இதேபோல் 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையின் இன்றைய நீர்மட்டம் 83.30 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 487 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

மலைப்பகுதியில் கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் நலன் கருதி நேற்று குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மணிமுத்தாறு அருவியில் குளிக்க இன்று 2வது நாளாக தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதனால் மணிமுத்தாறு அருவியில் சற்று தொலைவில் இருந்து சுற்றுலா பயணிகள் ரசித்து சென்றனர். சிலர் அங்கு ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரை தங்களது செல்போனில் படம் பிடித்து சென்றனர்.

தென்காசி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக ஆய்க்குடி, கடையநல்லூர் பகுதிகளில் 14 மில்லிமீட்டரும், தென்காசியில் 12 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது. செங்கோட்டை, சங்கரன்கோவில், ஆலங்குளம், வாசுதேவநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

அணைப்பகுதியில் பெய்த மழை காரணமாக ராமநதி அணை நீர்மட்டம் நேற்று ஒரேநாளில் 12 அடி உயர்ந்தது. இந்நிலையில் இன்று மேலும் 8 அடி உயர்ந்து 45 அடியாக உள்ளது.

இதேபோல் 85 அடி உயரம் கொண்ட கடனாநதியில் நீர்மட்டம் இன்று 5 அடி உயர்ந்து 35 அடியாக உள்ளது. அடவிநயினார் அணை நீர்மட்டம் 1½ அடி உயர்ந்து 48 அடியாக உள்ளது. இேதபோல் கருப்பாநதி அணை நீர்மட்டம் 38.56 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 17.12 அடியாகவும் உயர்ந்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்துள்ளது. பிரதான அணையான மெயினருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் மற்றும் புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் இன்று காலை தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் இன்று அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.

அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் அவர்கள் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.
Tags:    

Similar News