தமிழ்நாடு செய்திகள்
சத்துவாச்சாரி காந்திநகர் பகுதியில் சூறாவளி காற்றில் சாய்ந்து விழுந்த பேனர்கள்.

திருப்பத்தூர், வேலூரில் சூறை காற்றுடன் மழை- மரம், பேனர்கள் சாய்ந்தது

Published On 2022-04-18 11:52 IST   |   Update On 2022-04-18 11:52:00 IST
வேலூரில் கடந்த சில நாட்களாக 103 டிகிரி வெயில் கொளுத்தி வந்தது. இதனால் அனல் காற்றில் மக்கள் அவதிப்பட்டனர்.
வேலூர்:

திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பகலில் வெயில் கொளுத்தி வருகிறது. நேற்று மாலை கருமேகங்கள் திரண்டு சூறை காற்றுடன் பரவலாக மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் மழை கொட்டியது. மழையுடன் சூறை காற்று வீசியதால் கிராம புறங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது.

திருப்பத்தூரில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட தெருக்களில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

ஆலங்காயத்தில் 18.70 மில்லி மீட்டரும், திருப்பத்தூரில் 9.20 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வந்த நிலையில் கோடை மழையால் குளிர்ச்சியாக சீதோஷ்ண நிலை மாறியுள்ளது.

ஆம்பூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி பகுதியிலும் கருமேகங்கள் திரண்டு சூறை காற்று வீசியது. காற்று பலமாக வீசியதால் குறைவான அளவிலே மழை பெய்தது.

வேலூரில் கடந்த சில நாட்களாக 103 டிகிரி வெயில் கொளுத்தி வந்தது. இதனால் அனல் காற்றில் மக்கள் அவதிப்பட்டனர்.

நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மேல் திடீரென பலத்த காற்று வீசியது. அத்துடன் 12.15 மணிக்கு லேசான சாரல் மழையும் பெய்தது. கனமழை பெய்யாதா? என்று காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்நிலையில், நேற்றும் வெயில் வறுத்து எடுத்தது. மாலை 4.15 மணிக்கு நிலைமை அடியோடு மாறியது. திடீரென பலத்த காற்று வீசத் தொடங்கியது. நேரம் செல்லச்செல்ல காற்று வீசும் வேகமும் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் சூறைக்காற்று சுழன்று, சுழன்று வீசியதில் சாலையில் இருந்த பேனர்கள், விளம்பர பலகைகள் பறந்தன. சாலைகளில் பைக்குகளில் சென்றவர்கள் வண்டி ஓட்ட முடியாமல் தடுமாறினர். சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக இந்நிலைமை நீடித்தது. புழுதிப்புயல்போல் வீசியதால் சாலைகள் முழுவதும் மணல் குவிந்து கிடந்தது.

பிறகு லேசான சாரல் மழை பெய்யத்தொடங்கியது. சிறு, சிறு தூரல்கள் மட்டுமே அவ்வப்போது விழுந்தது. இதனால், ஓரளவு வெப்பம் தணிந்து காணப்பட்டது. இருப்பினும் கனமழை பெய்யும் என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

வேலூர் நகரைச் சுற்றியுள்ள காட்பாடி, கணியம்பாடி, பொய்கை, பள்ளிகொண்டா போன்ற இடங்களில் பரவலாக மழை பெய்தது.

Similar News