தமிழ்நாடு செய்திகள்
உடுமலை பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை காணலாம்

உடுமலை பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை

Published On 2022-04-16 09:45 IST   |   Update On 2022-04-16 09:45:00 IST
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மழையின் காரணமாக பல இடங்கள் சேறும் சகதியுமாக மாறி காட்சியளிக்கின்றன.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்தது. நேற்றிரவு பெய்த மழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மழையின் காரணமாக பல இடங்கள் சேறும் சகதியுமாக மாறி காட்சியளிக்கின்றன. திருப்பூர் கொங்கு மெயின் ரோடு, யூனியன் மில்ரோடு, பிச்சம்பாளையம் பகுதி, பாளையக்காடு ரோடு, கல்லம்பாளையம் ரெயில்வே பாலம் மற்றும் நடராஜா தியேட்டர் ரோடு பகுதிகள் என பெரும்பாலான ரோடுகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.

இதேப்போல் மாவட்டத்திற்குட்பட்ட உடுமலை சுற்றுப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.

மலைத்தொடரில் பெய்து வரும் மழையால் பஞ்சலிங்க அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள், பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அமணலிங்கேஸ்வரர் கோவிலில் இந்து அறநிலையத்துறை பணியாளர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திருமூர்த்தி அணைக்கு காண்டூர் கால்வாய் வாயிலாக வினாடிக்கு 740 கனஅடியும், பாலாறு வழியாக வினாடிக்கு 324 கன அடியும் நீர்வரத்து உள்ளது.

Similar News