தமிழ்நாடு செய்திகள்
சீறிப்பாய்ந்து வந்த காளையை அடக்கும் வீரர்கள்.

டி.கல்லுப்பட்டி அருகே 41 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த ஜல்லிக்கட்டு

Published On 2022-04-11 11:33 IST   |   Update On 2022-04-11 11:33:00 IST
41 ஆண்டுகளுக்கு பின்பு நடைபெறும் நல்லமரம் ஜல்லிக்கட்டு விழாவில் காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கி வருகின்றனர்.
திருமங்கலம்:

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள நல்லமரம் சைந்தவமுனிவர், கருப்பசாமி, பேச்சியம்மன், புண்ணியமூர்த்தி, திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் 600 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். போட்டியை மதுரை தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தொடங்கி வைத்தார்.

8 சுற்றுகளாக நடைபெறும் இந்த நல்லமரம் ஜல்லிக்கட்டு போட்டியில் சுற்றுக்கு 60மாடுபிடி வீரர்கள் வீதம் போட்டியில் களம் காண்கின்றனர். போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு இறுதிக்கட்டமாக மருத்துவ பரிசோதனை நடந்தது.

9 மருத்துவர்கள் கொண்ட 50 பேர் மருத்துவக்குழு மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. மாடுபிடி வீரர்கள் போதைவஸ்து சாப்பிட்டு இருந்தார்கா? அவர்களது உடலில் காயம் உள்ளதா? என்பது குறித்து பரிசோதனை செய்த பின்னரே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். போட்டியில் பங்கேற்கும் காளைகள் அனைத்துக்கும் பரிசு வழங்கப்படுகிறது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் பேரையூர் டி.எஸ்.பி. சரோஜா முன்னிலையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டியின்போது மாடுபிடி வீரர்களுக்கும், காளை உரிமையாளர்கள், பார்வையாளர்களுக்கு காயம் ஏற்பட்டால் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து பலத்த காயம் ஏற்பட்டால் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 3 அவசர ஊர்திகள் (108 ஆம்புலன்ஸ்) தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

41 ஆண்டுகளுக்கு பின்பு நடைபெறும் நல்லமரம் ஜல்லிக்கட்டு விழாவில் காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கி வருகின்றனர்.

Similar News