தமிழ்நாடு செய்திகள்
வானில் கார் பறந்து வந்த காட்சி - வானில் பறந்த கார் தேயிலை தோட்டத்தில் விழுந்து கிடப்பதை காணலாம்

200 மீட்டர் உயரம் வானில் பறந்து தேயிலை தோட்டத்திற்குள் பாய்ந்த கார்- அலறியடித்து ஓடிய தொழிலாளர்கள்

Published On 2022-04-04 11:05 IST   |   Update On 2022-04-04 11:05:00 IST
குன்னூர் அருகே 200 மீட்டர் உயரம் வானில் பறந்து தேயிலை தோட்டத்திற்குள் பாய்ந்த காரை பார்த்து பதறிபோன அந்த பகுதி தேயிலை தொழிலாளர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது தூதூர்மட்டம். இந்த பகுதியில் அதிகமான தேயிலை தோட்டங்கள் உள்ளன.

இங்குள்ள மக்கள் தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து வாழ்ந்து வருகின்றனர். நேற்று காலையும் அப்பகுதியில் உள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் மதிய வேளையில் பயங்கர சத்தத்துடன் கார் ஒன்று 200 மீட்டர் உயரத்திற்கு வானில் பறந்தபடி தேயிலை தோட்ட பகுதிக்குள் வந்து விழுந்தது.

இதனை பார்த்ததும் பதறிபோன அந்த பகுதி தேயிலை தொழிலாளர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். சிலர் பல அடி தூரம் நின்று கொண்டு, தங்கள் செல்போனில் கார் பறந்து வந்த காட்சியையும், தேயிலை தோட்டத்திற்குள் விழுவதையும் வீடியோவாக படம் எடுத்தனர்.

பின்னர் தங்கள் கிராமத்திற்குள் சென்று கார் ஒன்று வானில் பறந்து வந்து தேயிலை தோட்டத்திற்குள் விழுந்து விட்டதாக கூறி ஊர் பெரியவர்களிடம் தெரிவித்தனர்.

மேலும் அப்பகுதி மக்கள் கார் விழுந்து கிடந்த இடத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது தான் கார் பறந்து வந்து விழுந்தது விபத்து அல்ல என்பதும் சினிமா படப்பிடிப்பு காட்சி என்பதும் தெரியவந்தது.

நடிகர் நாகர்ஜூன் நடிக்கும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது.

இந்த படத்திற்காக நேற்று தூதூர் மட்டம் பகுதியில் சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்டதும், அப்போது கார் ஒன்று பறந்து தேயிலை தோட்டத்தில் விழுவது போன்று காட்சி எடுக்கப்பட்டது குறித்தும் பொதுமக்களுக்கு படப்பிடிப்பு குழுவினர் விளக்கினர்.

இதன் பின்னரே அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Similar News