தமிழ்நாடு
கொலை

தேவகோட்டையில் பெயிண்டர் கொலை- போலீசார் விசாரணை

Published On 2022-04-04 04:19 GMT   |   Update On 2022-04-04 04:19 GMT
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சரகத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதற்கு போலீஸ் நிலையங்களில் போதுமான போலீசார் இல்லாததே காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
தேவகோட்டை:

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை புது தெருவை சேர்ந்தவர் பிரான்மலை. இவரது மகன் உமர்பாரூக் (வயது 38). இவருக்கு திருமணமாகி மனைவி ரிஸ்வானா பர்வீன் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

உமர்பாரூக் பெயிண்டிங் மற்றும் கூலி வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் மணல் கடத்தல் வழக்கில் கைதாகி சிறை சென்றுள்ளார். அதன் பிறகு வழக்கம்போல் பெயிண்டர் வேலை செய்து வந்தார்.

நேற்று உமர்பாரூக் வீட்டில் இருந்து மாலை 3 மணிக்கு வெளியே புறப்பட்டு சென்றார். இரவு 10 மணி ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உமர்பாரூக்கை தேடினர்.

இந்த நிலையில் சாத்திக்கோட்டை அருகே தனியார் மருத்துவமனை பின்புறம் அவர் ரத்த காயங்களுடன் கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் விரைந்து வந்தனர். ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த உமர்பாரூக்கை மீட்டு தேவகோட்டை அரசு ஆஸ்பத் திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தேவகோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) சிவக்குமார், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் விசாரணை நடத்தினர்.

உமர்பாரூக்கை ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறையில் இருந்தபோது உமர்பாரூக்குக்கு அங்கு ஏற்கனவே வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் இருந்தவர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறையில் இருந்து வெளியே வந்த பிறகும் இந்த பழக்கம் நீடித்துள்ளது. எனவே அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கொலை நடந்து இருக்கலாமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை சரகத்தில் கடந்த சில நாட்களாக குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு போலீஸ் நிலையங்களில் போதுமான போலீசார் இல்லாததே காரணம் என சமூக ஆர்வலர்கள் குறை கூறுகின்றனர். பல இடங்களுக்கும் ரோந்து செல்ல போலீசார் இல்லாததால் குற்றச்செயல்கள் தொடர்வதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த நிலையை தடுக்க போலீசார் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.




Tags:    

Similar News