தமிழ்நாடு செய்திகள்
மருந்து குடோனுக்கு பாலியல் வழக்கில் கைதானவர்கள் அழைத்துச்செல்லப்பட்ட காட்சி

விருதுநகர் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு- கைதானவர்களை மருந்து குடோனுக்கு அழைத்து சென்று விசாரணை

Published On 2022-03-31 11:56 IST   |   Update On 2022-03-31 13:40:00 IST
பாலியல் வன்கொடுமை நடந்து வீடியோ எடுத்ததாக கூறப்படும் விருதுநகர் பெத்தனாச்சி நகரில் உள்ள மருந்து குடோனுக்கு ஹரிஹரன், ஜூனத் அகமது ஆகிய இருவரையும் போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள்.
விருதுநகர்:

விருதுநகரில் 22 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன், ஜூனத் அகமது, பிரவீன், மாடசாமி ஆகிய 4 பேர் மற்றும் 4 சிறுவர்கள் என 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேர் மதுரை மத்திய சிறையிலும், சிறுவர்கள் 4 பேரும் ராமநாதபுரம் கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர். விருதுநகர் பாண்டியன்நகர் போலீஸ் நிலையத்தில் பதியப்பட்டிருந்த இந்த வழக்கு, முதலமைச்சர் உத்தரவைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்யப்பட்டவர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர். மேலும் தங்களின் விசாரணையை துரிதப்படுத்தினர். முதலில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் 2 நாட்கள் விசாரணை நடத்தினர். மேலும் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தினர்.

இந்தநிலையில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேரையும் 7 நாள் போலீஸ் காவலில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் எடுத்தனர். அவர்களிடம் நேற்று முன்தினம் முதல் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் விருதுநகர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் மட்டுமின்றி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் ஈடுபட்டுள்ளனர்.

கைதானவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள் என ஏராளமானவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கைதானவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று 3-ம் நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலியல் வன்கொடுமை நடந்து வீடியோ எடுத்ததாக கூறப்படும் விருதுநகர் பெத்தனாச்சி நகரில் உள்ள மருந்து குடோனுக்கு ஹரிஹரன், ஜூனத் அகமது ஆகிய இருவரையும் போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் சில இடங்களுக்கும் அவர்களை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது மருந்து குடோனில் சில இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதை ஊசிகள் மற்றும் மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அது தொடர்பான தகவல்களை தெரிவிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் மறுத்து விட்டனர்.



Similar News