தமிழ்நாடு செய்திகள்
கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்த மாணவர்கள்.

மாணவர்கள் நலனில் அக்கறையின்றி செயல்பட்ட தலைமையாசிரியர் சஸ்பெண்டு

Published On 2022-03-24 09:40 IST   |   Update On 2022-03-24 09:40:00 IST
மாணவர்கள் நலனில் அக்கறையின்றி செயல்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மழையூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பிளஸ்- 2 வகுப்பில் கணினி வணிகவியல் பிரிவில் 45 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த வகுப்பை சேர்ந்த மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் சீருடையில் நேற்று புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் வந்தனர். அப்போது நுழைவு வாயில் அருகே கலெக்டர் கவிதா ராமு காரில் வந்து கொண்டிருந்தார்.

சீருடையில் மாணவர்கள் செல்வதை கண்ட அவர், காரை நிறுத்தி மாணவர்களிடம் விசாரித்தார். அப்போது பள்ளியில் தங்கள் வகுப்புகளுக்கு பாடங்கள் நடத்த ஆசிரியர்கள் போதுமானதாக இல்லை, ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க மனு அளிக்க வந்ததாக மாணவர்கள் கூறினர். அவர்களை தனது அலுவலகத்திற்கு தேரில் வருமாறு கூறி சென்று மாணவர்களிடம் மனுவை பெற்றார்.

மனு அளிக்க வந்த மாணவர்கள் கூறுகையில், எங்களது பள்ளியில் பிளஸ்- 2 வணிகவியல் பிரிவில் தமிழ், ஆங்கிலம், கணினி பயன்பாடு, கணக்குப்பதிவியல், வணிகவியல், தணிக்கையியல் ஆகிய 6 பாடங்கள் உள்னது. இதில் கணக்குப்பதிவியல், வணிகவியல், தணிக்கை ஆகிய 3 பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை.

இதனால் பாடங்கள் எங்களுக்கு நடத்தப்படவில்லை. வணிகவியல் பாடத்திற்கு மட்டும் 10-ம் வகுப்பு ஆசிரியர் ஒருவர் அவ்வப்போது வந்து பாடம் நடத்துவதுண்டு, நாங்கள் இந்த பாடங்களை முழுமையாக படிக்கவில்லை. திருப்புதல் தேர்வை தொடர்ந்து விரைவில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. அதற்குள் நாங்கள் பாடங்களை படிக்க முடியும், எப்படி நாங்கள் பொதுத்தேர்வு எழுத முடியும்.

இதனால் பாடங்களை நடத்த போதுமான ஆசிரியர்களை நியமிக்கவேண்டும். நாங்கள் இந்த 3 பாடங்களையும் முழுமையாக படித்து பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவோமா? என்பது தெரியவில்லை. எனவே எங்களை தேர்ச்சி பெற வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். கலெக்டரிடமும் இதே கருத்தை மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பிளஸ்-2 வகுப்பில் ஆசிரியர்கள் இல்லாததால் பாடங்களை முழுமையாக படிக்கவில்லை என மாணவர்கள் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. கலெக்டரிடம் மாணவர்கள் மனு அளிப்பதற்கு முன்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடமும் இதே கோரிக்கையை கூறி முறையிட்டனர்.

பள்ளி தொடங்கி 5 மாதங்கள் ஆகியும் ஆசிரியர்கள் நியமிக்கப்படாதது இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் தெரிவிக்காத மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அரங்கசாமியை (வயது 58) பணியிடை நீக்கம் செய்ய கலெக்டர் கவிதா ராமு உத்தரவிட்டார்.

அதன்படி அவரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அதிகாரி சாமி.சத்தியமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். பள்ளியில் மாணவர்கள் நலன் கருதி பொதுத்தேர்வுக்கு தயாராக, 2 ஆசிரியர்கள் மாற்றுப்பணியில் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேற்கண்ட பள்ளியில் கணினி அறிவியல், வணிகவியல், கணக்குப்பதிவியல், தணிக்கையியல் ஆகிய பாடப்பிரிவுகள் புதிதாக தொடங்க அனுமதி வாங்கிய போது பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் ஆசிரியர்களை நியமனம் செய்வதாக கூறியும், அதற்கான நடவ டிக்கையை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News