தமிழ்நாடு செய்திகள்
நண்பருடன் சினிமா பார்க்க சென்ற ஆஸ்பத்திரி பெண் ஊழியரை கடத்தி கற்பழித்த 4 பேர் கைது
வேலூரில் இளம்பெண்ணை கடத்தி கூட்டுப்பலாத்காரம் செய்த காமுகர்கள் 5 பேரில் 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் காட்பாடியில் திருவலம் ரோட்டில் சமீபத்தில் திறக்கப்பட்ட தியேட்டரில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வேலூர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் பெண் ஊழியர் மற்றும் அவரது நண்பர் ஒருவரும் இரவு காட்சி சினிமா பார்க்க சென்றனர்.
படம் முடிந்து இரவு 1 மணிக்கு 2 பேரும் தியேட்டர் முன்பு ஆட்டோவுக்காக காத்து நின்றனர். இவர்களை நோட்டமிட்ட மர்மநபர்கள் 5 பேர் ஒரு ஆட்டோவில் அங்கு வந்தனர்.
ஆட்டோ ஓட்டிய டிரைவர் எங்கே செல்லவேண்டும் என்று கேட்டுள்ளார். அவர்கள் தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என கூறினர்.
இது ஷேர் ஆட்டோ தான் நீங்கள் ஏறுங்கள் என டிரைவர் கூறினார்.
இதனை கேட்டதும் இருவரும் ஆட்டோவில் ஏறினர்.
காட்பாடியில் இருந்து வேகமாக வந்த ஆட்டோ கிரீன் சர்க்கிள் வந்ததும் சத்துவாச்சாரி சர்வீஸ் சாலை நோக்கி திரும்பியது.
அங்கிருந்து பாலாற்றின் கரைக்கு கடத்திச்சென்று இருவரையும் தாக்கினர். அவர்களிடம் 2 பவுன் நகை, ஏ.டி.எம். கார்டுகள் செல்போன் ஆகியவற்றை பறித்தனர். மேலும் ஆண் ஊழியரை 2 பேர் ஆட்டோவில் அழைத்து சென்று வேலூரில் உள்ள ஏடிஎம் மையத்தில் அவர்களது கார்டுகளைப் பயன்படுத்தி ரூ.40,000 பணம் எடுத்தனர்.
மீண்டும் பாலாற்றங்கரைக்கு சென்ற அவர்கள் பெண் ஊழியரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தனர். பெண் ஊழியர் பணம் நகையை எடுத்து விட்டீர்கள். தயவு செய்து எங்களை விட்டு விடுங்கள் என கெஞ்சி கேட்டும் இந்த கும்பல் கொஞ்சம் கூட இரக்கம் காட்டாமல் மிருகத்தனமாக நடந்துள்ளனர்.
கும்பல் விடுவித்த பின்னர் இருவரும் அங்கிருந்து ஆஸ்பத்திரிக்கு திரும்பியுள்ளனர். அவர்களிடம் பறித்த பணத்தைக்கொண்டு கும்பல் 5 பேரும் சேர்ந்து உல்லாசமாக செலவு செய்தனர். புதிதாக ஆடைகள் வாங்கி ஆடம்பரமாக சுற்றித் திரிந்தனர்.மேலும் உயர் ரக மதுபானங்கள் வாங்கி குடித்தனர்.
இந்த நிலையில் வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகில் போதையில் 2 வாலிபர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
அப்போது அங்கு வந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரித்த போது தான் ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் பறிமுதல் செய்த பணத்தை பங்கீடு செய்வதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டது தெரியவந்தது.
அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது தான் அவர்கள் ஆஸ்பத்திரி ஊழியர்களை கடத்திச் சென்று பணம் நகை பறித்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் ஆன்லைன் மூலமாக வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் அந்த கும்பலை சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்கள் மீது ஆயுதங்களுடன் சேர்ந்து அச்சுறுத்துவது, கடத்தி சிறை வைப்பது, கட்டாயப்படுத்தி கடத்தியது, அடைத்து வைப்பது, கூட்டு பலாத்காரம், தொடர் குற்றங்களில் ஈடுபடுவது, கூட்டுக் கொள்ளை, ஆயுதம் வைத்து மிரட்டல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தடயங்கள் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
வேலூரில் இளம்பெண்ணை கடத்தி கூட்டுப்பலாத்காரம் செய்த காமுகர்கள் 5 பேரில் 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
இந்த கும்பல் இவ்வளவு துணிச்சலுடன் முதன்முறையாக கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட வாய்ப்பில்லை. இதற்கு முன்னதாக இதே போல் மேலும் பெண்களை கடத்தி பலாத்காரம் செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து அவர்களது செல்போன்களில் வீடியோக்கள் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் ஆன்லைன் மூலம் புகார் அளிக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் இரவு நேரம் தனியாக ஆட்டோவில் செல்லும் பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்யும் கும்பல்கள் செயல்படுகிறதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.