தமிழ்நாடு செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- நாளை மறுநாள் பிரசாரம் ஓய்கிறது

Published On 2022-02-15 14:30 IST   |   Update On 2022-02-15 14:30:00 IST
தேர்தல் பிரசாரத்துக்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் வேட்பாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
சென்னை:

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும், சுயேட்சைகளும் தேர்தல் களத்தில் சுறுசுறுப்புடன் பணியாற்றி வருகிறார்கள்.

வீடு வீடாக சென்று தாங்கள் போட்டியிடும் வார்டுகளில் ஆதரவு திரட்டி ஓட்டு வேட்டையாடி வருகிறார்கள்.

தேர்தல் பிரசாரம் நாளை மறுநாள் (17-ந்தேதி) மாலை 6 மணியுடன் ஓய்கிறது. தேர்தல் பிரசாரத்துக்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் வேட்பாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

அதிகாலையிலேயே பிரசாரத்தை தொடங்கும் இவர்கள் இரவு 10 மணி வரை இடைவிடாது மக்களை சந்தித்து ஓட்டு கேட்டு வருகிறார்கள்.

தேர்தலுக்கு முந்தைய நாளான 18-ந்தேதியன்று பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் நாளை மறுநாளுக்கு பிறகு அரசியல் கட்சி வேட்பாளர்களால் பிரசாரம் செய்ய இயலாது.

இதனை கருத்தில் கொண்டு வேட்பாளர்களும், இரண்டாம் கட்ட தலைவர்களும் வீதி வீதியாக வாக்கு சேகரித்து வருகிறார்கள். இதனால் தேர்தல் களத்தில் அனல் பறக்கும் உச்சக்கட்ட பரபரப்பு நிலவுகிறது.

அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது இறுதிக்கட்ட பிரசாரத்தை வேகப்படுத்தி இருக்கிறார்கள். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் பிரசார களத்தில் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்டோரும் தேர்தல் பிரசாரத்தை முடுக்கி விட்டுள்ளனர்.

Similar News