தமிழ்நாடு
விபத்து

மேல்மருவத்தூர் அருகே லாரி மீது சரக்கு வேன் மோதல்- சிறுமி உள்பட 3 பேர் பலி

Published On 2022-02-08 05:54 GMT   |   Update On 2022-02-08 05:54 GMT
மேல்மருவத்தூர் அருகே சோத்துபாக்கத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் சிறுமி உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
மதுராந்தகம்:

பல்லாவரம் அருகே உள்ள கெருகம்பாக்கம் அன்னை இந்திரா நகரை சேர்ந்த 14 பேர் குடும்பத்துடன் உசிலம்பட்டி அடுத்த உச்சம்பட்டி என்ற கிராமத்தில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு சாமி கும்பிட சென்றனர்.

அனைவரும் சரக்கு வேனில் பயணம் செய்தனர். சாமி வழிபாடு முடிந்ததும் அனைவரும் சரக்கு வேனில் மீண்டும் சென்னை நோக்கி திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

இன்று அதிகாலை 4 மணி அளவில் மேல்மருவத்தூர் அருகே சோத்துபாக்கத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்து கொண்டு இருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலை ஓரத்தில் நின்று கொண்டு இருந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது.

இதில் சரக்கு வேனின் முன் பகுதி நொறுங்கியது. அதில் பயணம் செய்த தங்கபாண்டி (வயது 30), வீரன் (60), சிறிமி யாழினி (3) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

மேலும், வேனை ஓட்டிய டிரைவர் பாண்டியன் மற்றும் பயணம் செய்த ரமேஷ், ராமு, சுரேஷ், திவ்யா, அமுதா, பஞ்சம்மாள், ஜோதி மற்றும் குழந்தைகள் ஹரிதா, ஆர்த்தி, பிரபாகரன் ஆகிய 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து அறிந்ததும் மேல்மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த 11 பேரும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News