தமிழ்நாடு
கட்சி கொடி எரிக்கப்பட்டு கிடந்ததை காணலாம்

அ.தி.மு.க. கொடியை எரித்த ‘மர்ம’ நபர்களால் பரபரப்பு- தொண்டர்கள் திரண்டதால் பதட்டம்

Published On 2022-01-21 09:51 GMT   |   Update On 2022-01-21 09:51 GMT
கொடியை எரித்த சமூக விரோதிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக பரவாய் கிளை அ.தி.மு.க.வினர் தெரிவித்துள்ளனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ளது பரவாய் கிராமம். இந்த கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகே மழவராயநல்லூர் செல்லும் பிரிவு சாலையில் அ.தி.மு.க. கொடி கம்பம் மேடையுடன் கட்டப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த கொடி கம்பத்தின் பக்கவாட்டில் ஒட்டப்பட்டிருந்த கட்சியின் கலர் டைல்ஸ்களை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தி இருந்தனர். இதுகுறித்து குன்னம் போலீசில் கட்சி நிர்வாகிகள் புகார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு இந்த கொடிக்கம்பத்தின் மேடையில் மர்ம நபர்கள் அமர்ந்து மது குடித்து விட்டு, அதே இடத்தில் பாட்டில்களை போட்டு உடைத்துள்ளனர். மேலும் கொடிக்கம்பத்தில் கட்டப்பட்டிருந்த அ.தி.மு.க. கட்சி கொடியின் கயிற்றை அறுத்து, கொடியை கீழே இறக்கி கொடிக்கம்ப மேடை அருகிலேயே தீ வைத்து எரித்துள்ளனர்.

இன்று காலை அப்பகுதி வழியாக சென்ற அ.தி.மு.க.வினர் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில் இதை அறிந்த அ.தி.மு.க.வினர் சம்பவ இடத்தில் குவிய தொடங்கியதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் சம்பவம் குறித்து பரவாய் கிளைச் செயலாளர் வேல்முருகன் குன்னம் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். மேலும் சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

பரவாய் கிளை அ.தி.மு.க.வினர் கொடியை எரித்த சமூக விரோதிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அ.தி.மு.க.வினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News