தமிழ்நாடு
மாட்டுக்கொட்டகையில் சோர்வாக கிடந்த சிறுத்தை குட்டி.

ஆசனூர் அருகே மாட்டுகொட்டகையில் கிடந்த 3 மாத பெண் சிறுத்தை குட்டி

Published On 2022-01-12 06:51 GMT   |   Update On 2022-01-12 06:51 GMT
சிறுத்தை குட்டி வனப்பகுதியில் இருந்து மாட்டு கொட்டகைக்கு எப்படி வந்தது என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாளவாடி:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட தாளவாடி மற்றும் ஆசனூர் வனப்பகுதியில் சிறுத்தைகள் அதிகளவில் உள்ளன.

அடர்ந்த காட்டுப்பகுதியில் வாழும் சிறுத்தைகள் அடிக்கடி கிராம பகுதிக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வருகிறது.

இந்நிலையில் ஆசனூர் அடுத்த பங்களா தொட்டி என்ற பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவர் ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். இன்று காலை அவர் வழக்கம்போல மாடுகளை பராமரிக்க மாட்டு கொட்டகைக்கு சென்றார்.

அப்போது மாட்டுக்கொட்டயின் ஒரு பகுதியில் ஒரு சிறுத்தை குட்டி சோர்வுடன் படுத்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இது குறித்து அவர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த வனத்துறையினர் சிறுத்தை குட்டியை மீட்டு பரிசோதனை செய்தனர். அப்போது அது 3 மாதமே ஆன பெண் சிறுத்தை குட்டி என்பது தெரியவந்தது.

இதனையடுத்து வனத்துறையினர் அந்த சிறுத்தை குட்டியை மீட்டு ஆசனூர் வனஅலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு வனத்துறை டாக்டர். அசோகன் சிறுத்தை குட்டியை பரிசோதனை செய்தார். பரிசோதனையில் சிறுத்தை குட்டி சோர்வுடன் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து மருத்துக் குழுவினர் சிறுத்தை குட்டிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். சிறுத்தை குட்டியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டவுடன் அதனை மீண்டும் தாயிடம் சேர்க்க முயற்சி எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் இந்த சிறுத்தை குட்டி வனப்பகுதியில் இருந்து மாட்டு கொட்டகைக்கு எப்படி வந்தது என்பது குறித்தும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News