தமிழ்நாடு செய்திகள்
பாலியல் தொல்லை

சுரண்டையில் பள்ளி ஆசிரியர் மீது மாணவிகள் பாலியல் புகார் - நிர்வாகம் சார்பாக அதிரடி விசாரணை

Published On 2021-12-30 11:38 IST   |   Update On 2021-12-30 11:38:00 IST
சுரண்டையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி ஆசிரியர் மீது நிர்வாகம் சார்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தென்காசி:

திசையன்விளையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் தென்காசி மாவட்டம் சுரண்டையிலும் பள்ளி ஆசிரியர் ஒருவர் மீது மாணவிகள் பாலியல் புகார் கூறி உள்ளனர்.

சுரண்டை பகுதியில் அரசு நிதி உதவிபெறும் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 8-ம் வகுப்பிற்கு பாடம் நடத்தும் ஒரு ஆசிரியர் மாணவிகளை அடிக்கடி தன் அருகே அழைத்து ‘சாக்லேட்’ கொடுத்து பேசுவாராம்.

அப்போது மாணவிகளின் உடலை தொட்டு பேசுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பல மாணவிகள் மற்ற ஆசிரியரிடமும், பெற்றோரிடமும் புகார் கூறினார்கள்.

இதையடுத்து அந்த ஆசிரியர் மீது தலைமை ஆசிரியரிடமும் பள்ளி தாளாளரிடமும் புகார் கூறினார்கள். இந்தச் சம்பவம் உண்மையா? என்று விசாரிப்பதற்காக அந்த பள்ளி ஆசிரியர்கள் அடங்கிய விசாரணை குழு அமைக்கப்பட்டது.

இந்த விசாரணை குழுவினர் சம்பந்தப்பட்ட ஆசிரியர் குறித்து மாணவிகளிடமும் ஆசிரியரிடமும் விசாரணை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் எழுத்துப்பூர்வமாக பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதன் பேரில் பள்ளி நிர்வாகம் அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க விளக்கம் கேட்டுள்ளது. விரைவில் அந்த ஆசிரியரும் ‘சஸ்பெண்டு’ செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

Similar News