தமிழ்நாடு
தேங்கிய மழைநீரில் சிக்கிய காரை மீட்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்ட காட்சி

கோவையில் 2 மணி நேரத்தில் 7 செ.மீ மழை கொட்டியது

Published On 2021-12-05 04:01 GMT   |   Update On 2021-12-05 04:01 GMT
கோவை ரெயில் நிலையம் அருகே லங்கா கார்னர் ரெயில்வே பாலத்தின் கீழ் மழைநீர் தேங்கியது.

கோவை:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் வெயில் அடித்தது. மதியத்திற்கு பிறகு வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து நகரமே இருளில் மூழ்கியது. சிறிது நேரத்தில் கனமழை பெய்ய தொடங்கியது. 

மாலை 3 மணிக்கு தொடங்கிய மழை மாலை 5 மணி வரை 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழையாக கொட்டி தீர்த்தது. அதன்பின்னரும் தூறல் விழுந்து கொண்டே இருந்தது.

2 மணி நேரம் கொட்டிய மழையால் மாநகரில் உள்ள ஆர்.எஸ்.புரம், உக்கடம், செல்வபுரம் டவுன்ஹால், காந்திபுரம், திருச்சி சாலை அவினாசி சாலை, சத்தி சாலை, உக்கடம் சாலை, ராமநாதபுரம் சாலை, மேட்டுப்பாளையம் சாலை என மாநகரின் முக்கிய சாலைகள் அனைத்திலும் தண்ணீர் ஆறாக ஓடியது. தாழ்வான இடங்களிலும் தண்ணீர் தேங்கியது.

சாலைகளில் பெருக்கெடுத்த தண்ணீரால் அந்த வழியாக சென்ற இரு சக்கர வாகனங்கள், பஸ்கள், கார்கள், லாரிகள் என அனைத்தும் ஊர்ந்தே சென்றன. மாலை நேரத்தில் பெய்த மழை காரணமாக வேலை முடிந்து வீட்டிற்கும் திரும்புவோர், பள்ளி மாணவ, மாணவிகள் என அனைவரும் வெகுவாக சிரமம் அடைந்தனர்.

இந்த மழையால் சில இடங்களில் வழக்கத்திற்கு மாறாக தண்ணீர் ஓடியதால் பல சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. குறிப்பாக காந்திபுரம், கிராஸ்கட், உக்கடம், டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் உண்டானது.

சாதாரண நாட்களிலேயே இந்த சாலைகளில் போக்குவரத்து நெரிசல் இருக்கும். நேற்று மழை பெய்ததால் அதிகளவில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் இந்த சாலைகளின் இருபுறங்களிலும் சுமார் அரை கி.மீ தூரத்திற்கும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதை பார்க்க முடிந்தது.

கொட்டும் மழையிலும் வாகன ஓட்டிகள் நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் சிரமம் அடைந்தனர்.

கோவை ரெயில் நிலையம் அருகே லங்கா கார்னர் ரெயில்வே பாலத்தின் கீழ் மழைநீர் தேங்கியது. அதனையும் பொருட்படுத்தாமல் சென்ற தனியார் பஸ்சுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சலிட்டு அலறி அடித்து கொண்டு பஸ்சை விட்டு இறங்கி வெளியில் ஓடினர்.

குழந்தை உள்பட 8 பேர் வெளியில் வர முடியாமல் தவிக்கவே தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து 8 பேரையும் பத்திரமாக மீட்டனர். மேலும் பொக்லைன் எந்திரம் மூலம் பஸ்சும் மீட்கப்பட்டு வெளியில் கொண்டு வரப்பட்டது.

தொடர் மழையால் அவினாசி மேம்பாலத்தின் கீழ் பகுதி தண்ணீரில் மூழ்கியது. அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார் நீரில் சிக்கியது. உடனடியாக அந்த வழியாக வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது.

இதேபோல் புரூக் பீல்டு காம்ராஜ் நகர் ரெயில்வே பாலத்தின் கீழ் தேங்கிய தண்ணீரிலும் கார் ஒன்று சிக்கியது. அதில் இருந்தவர்கள் கீழே இறங்கி தப்பித்தனர். தற்போது இந்த பாலங்களின் கீழ் தேங்கிய தண்ணீரை மின் மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர் மழைக்கு ரத்தினபுரியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீருடன் கழிவு நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். மழை நின்றதும், மக்கள் வாளி மூலம் தண்ணீரை வெளியேற்றினர்.

துடியலூர், தொப்பம்பட்டி, வெள்ளகிணர், உருமாண்டம்பாளையம் பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த மழையால் துடியலூர்- மேட்டுப்பாளையம் சாலை, சரவணம்பட்டி சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாநகரில் அதிகபட்சமாக கோவை தெற்கு பகுதியில் 7 செ.மீ மழையும், மாவட்டத்தில் சின்னக்கல்லாரில் 4 செ.மீ மழையும் பெய்துள்ளது.

மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

கோவை தெற்கு-71, சின்னகல்லார்-47, விமான நிலையம்-20, பெரியநாயக்கன் பாளையம்-21.40 என மாவட்டம் முழுவம் 196.40 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது

Tags:    

Similar News