செய்திகள்
கடல் பகுதியில் உள்ள குருசடை தீவில் பனை மரங்கள் வளர்ந்து இருப்பதை படத்தில் காணலாம்.

தூத்துக்குடி, ராமநாதபுரம் பகுதியில் 10 தீவுகளில் 25 ஆயிரம் பனை விதைகள் நடவு

Published On 2021-11-29 02:59 GMT   |   Update On 2021-11-29 03:12 GMT
வான்தீவு பகுதியில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு பனைமர விதைகளை நடவு செய்யும் பணி தொடங்கப்பட்டது.
தூத்துக்குடி :

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

மன்னார் வளைகுடா பகுதியில் 21 தீவுகள் உள்ளன. இதில் 2 தீவுகள் ஏற்கனவே கடலில் மூழ்கிவிட்டன. மேலும் தூத்துக்குடி பகுதியில் உள்ள வான்தீவு கடலில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டது. இதனை பாதுகாக்க வான்தீவு பகுதியில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு பனைமர விதைகளை நடவு செய்யும் பணி தொடங்கப்பட்டது. வான் தீவு மற்றும் குருசடை தீவு பகுதியில் இந்த விதைகள் முளைத்து தற்போது ஒரு அடி முதல் 2 அடி வரை வளர்ந்து உள்ளன.

இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் குருசடை உள்பட 10 தீவுகளில் பனைமர விதைகளை நடவு செய்யும் பணி விரிவுபடுத்தப்பட்டது. சீசன் காலத்தில் பனைமர விதைகளை சேகரித்து படகுகள் மூலம் தீவு பகுதிகளுக்கு கொண்டு சென்று நடவு செய்து வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளில் 10 தீவுகளிலும் சுமார் 25 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டு உள்ளன. இதன்மூலம் கடல் அரிப்பை தடுத்து தீவுகள் மூழ்குவதை தடுக்க முடியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News