செய்திகள்
கடையில் தீ கொழுந்து விட்டு எரிவதையும், பொருட்கள் கருகி சேதமாகி இருப்பதையும் காணலாம்.

மதுரையில் ஜவுளி கடையில் பயங்கர தீ விபத்து: ஆடைகள்-பொருட்கள் எரிந்து சேதம்

Published On 2021-11-20 05:37 GMT   |   Update On 2021-11-20 05:37 GMT
மதுரையில் ஜவுளி கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மதுரை:

மதுரை கீழமாசி வீதியில் பிரபல ஜவுளிக்கடை முதல் மாடியில் இயங்கி வருகிறது. அந்த கடையில் இருந்து இன்று அதிகாலை 6 மணி அளவில் கரும்புகை வெளிவரத் தொடங்கியது.

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே விளக்குத்தூண் போலீஸ் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதன்பேரில் பெரியார் பஸ் நிலைய தீயணைப்பு அதிகாரி வெங்கடேசன் தலைமையில் வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். அதற்குள் கடையில் தீ வேகமாக பரவி இருந்தது. அங்கிருந்த ரெடிமேட் ஆடைகள் மற்றும் பொருட்கள் மீதும் தீ பரவியது.

தீயணைப்பு படை வீரர்கள் ‌ஷட்டரை உடைத்து கடைக்குள் புகுந்து தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். ½ மணி நேரத்திற்கு பிறகே தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்கு வந்தது.

இருப்பினும் கடையில் இருந்த பெருமளவு பொருட்கள், ஆடைகள் எரிந்து சாம்பலாகி இருந்தன.

கடையில் இருந்த இன்வெர்ட்டர் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் அனைத்தும் வெடித்திருந்தன.

இதுதொடர்பாக ஜவுளிக்கடை உரிமையாளர் குமான் சிங் கொடுத்த புகாரின் பேரில் விளக்குத்தூண் போலீசார் விசாரித்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

மதுரை கீழமாசி வீதியில் தீ விபத்து நடந்த கடைக்கு அருகில் எண்ணற்ற ஜவுளி கடைகள் உள்ளன. தீயணைப்பு படையினர் உடனடியாக விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரிய அளவிலான தீ விபத்து முற்றிலுமாக தவிர்க்கப்பட்டது.


Tags:    

Similar News