செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15 ஆயிரத்து 740 கனஅடியாக அதிகரிப்பு

Published On 2021-11-06 09:21 IST   |   Update On 2021-11-06 09:21:00 IST
இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டூர்:

கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜாசாகர் அணைகளில் இருந்து 9 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீருடன் மழை நீரும் சேர்ந்து ஒகேனக்கல்லுக்கு வருகிறது.

ஒகேனக்கல்லில் நேற்று மாலை விநாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல்லில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 11 ஆயிரத்து 772 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 15 ஆயிரத்து 740 கன அடியானது. அணையில் இருந்து காவிரியில் 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கால்வாயில் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 400 கன அடியாக குறைக்கப்பட்டது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று 113.59 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 114.46 அடியானது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News