செய்திகள்
கொள்ளை நடந்த வீடு.

தேவகோட்டை அருகே ஓய்வுபெற்ற பேராசிரியர் வீட்டில் ரூ.17 லட்சம் தங்கம், வைர நகைகள் கொள்ளை

Published On 2021-09-19 04:51 GMT   |   Update On 2021-09-19 04:51 GMT
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே ஓய்வுபெற்ற பேராசிரியர் வீட்டில் ரூ.17 லட்சம் தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவகோட்டை:

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள ஆறாவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சப்பன். இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியர்.

இவரது மனைவி சொர்ணம் மற்றும் 2 மகன்கள் குடும்பத்துடன் மதுரையில் வசித்து வருகின்றனர். முதல் மகன் வள்ளியப்பன் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு பைனான்ஸ் செய்து வருகிறார். 2-வது மகன் ராமசாமி ஷேர் மார்க்கெட் தொழில் செய்து வருகிறார்.

கடந்த மாதம் 25-ந்தேதி உறவினர் வீட்டு திருமணத்திற்கு வந்தபோது பிச்சப்பன் ஆறாவயலில் உள்ள வீட்டுக்கு வந்து சென்றார்.

அதன் பிறகு நேற்று மாலை 2-வது மகன் ராமசாமி, மனைவி விசாலாட்சி இருவரும் தற்போது மழையால் வீட்டுக்குள் தண்ணீர் தேங்கி உள்ளதா? என்று பார்ப்பதற்காக ஆறாவயல் வீட்டிற்கு வந்தனர்.

அப்போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டிற்கு உள்ளே உள்ள 4 அறைகளின் கதவுகளும் உடைக்கப்பட்டு இருந்தன. அறைகளில் இருந்த 4 பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ராமசாமி ஆறாவயல் போலீசில் புகார் செய்தார்.

சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், தேவகோட்டை டி.எஸ்.பி. ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

முதல் கட்ட விசாரணையில் பிச்சப்பன் வீட்டில் இருந்த ரூ.17 லட்சம் மதிப்புள்ள 18 கேரட் வைரம், 34 பவுன் தங்க நகைகள், 40 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரிய வந்தது.

சிவகங்கையில் இருந்து தடவியல் நிபுணர் குழுவினர் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் ராம்போ கொள்ளையர்கள் வந்து சென்ற வழியாக ஓடியது.

இந்த கொள்ளையில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள் யார்? என்று தெரியவில்லை. தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த கொள்ளையர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம்? என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அவர்களை பிடிக்க தேவகோட்டை டி.எஸ்.பி. ரமேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், ராமச்சந்திரன், தலைமை காவலர் இளங்கோ, செந்தாமரை, சிலம்பரசன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

ஆறாவயல் கிராமத்தில் அதிக அளவில் நகரத்தார்கள் வசித்து வருகின்றனர். இவர்களது பெரும்பாலான வீடுகள் பூட்டியே கிடக்கின்றன. இதனை பயன்படுத்தி சில நாட்களுக்கு முன்பு கதவுகள் உடைக்கப்பட்டு திருட முயற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஓய்வுபெற்ற பேராசிரியர் வீட்டில் மர்ம கும்பல் கைவரிசை காட்டி உள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News